கொரோனா பரவல் காரணமாக உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை..!!

கொரோனா பரவல் காரணமாக, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை (ஏப்.,17) முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என தலைமை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது.

இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உடன் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை (ஏப்.,17) முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என தலைமை பதிவாளர் ப.தனபால் அறிவித்துள்ளார். மேலும், முக்கிய வழக்குகள் மற்றும் ஜாமின் வழக்குகளில் மட்டும் அரசு வழக்கறிஞர்கள் நேரடியாக ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து வழக்கு விசாரணையும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் எனவும் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாள் (ஏப்.,22) கொரோனா சூழல் குறித்து ஆய்வு செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே