சென்னை ஈசிஆர் முட்டுக்காட்டில் நடிகை குஷ்பு கைது..!!

திருமாவளவன் மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் மனுநூல் பெண்களை இழிவு செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். இதனால், திருமாவளவனைக் கண்டித்து பாஜகவினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோன்று, பாஜகவினரைக் கண்டித்து விசிகவினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருமாவளவனைக் கண்டித்து சிதம்பரத்தில் பாஜகவினர் குஷ்பு தலைமையில் இன்று (அக். 27) காலை ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை நேற்றே அனுமதி மறுத்திருந்தது. இதனால், சிதம்பரத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

இந்நிலையில் அனுமதி மீறி இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து சிதம்பரத்துக்குப் புறப்பட்டார் குஷ்பு.

அவரை ஈசிஆர் முட்டுக்காடு அருகே காவல்துறை கைது செய்தது. அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரையும், திருமாவளவனையும் கடுமையாகச் சாடி ட்வீட் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் குஷ்பு.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

“சிதம்பரம் செல்லும் வழியில் எங்களை எல்லாம் கைது செய்துவிட்டார்கள். சிதம்பரம் போவதற்குத் தடை இருக்கிறது. கடலூர் வரைக்கும் எங்களை விடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், முட்டுக்காடு தாண்டி செங்கல்பட்டு மாவட்டம் தொடங்கும் இடத்தில் எங்களைக் கைது செய்து இங்கு உட்கார வைத்திருக்கிறார்கள்.

திருமாவளவன் பெண்களுக்கு எதிராகப் பேசியதற்காகத்தான் இந்தப் போராட்டம் நடத்துகிறோம். அவரை எப்போதுமே அண்ணன் திருமாவளவன் என்றுதான் சொல்வேன்.

அந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தேன். இப்படிப் பெண்களுக்கு எதிராக இவ்வளவு கேவலமான செயலை அவர் பண்ணும்போது, எப்படி இனிமேல் அண்ணன் எனக் கூப்பிட முடியும் எனத் தெரியவில்லை.

அவர் பேசிய விஷயம் 3000 வருடங்களுக்கு முன்பு உள்ள விஷயம் என்கிறார்கள். இன்றைக்கு அம்பேத்கரின் சட்டம்தான் உள்ளது. எப்போதோ எழுதிய விஷயம், சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் என மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது.

தேவையில்லாத விஷயத்தை இப்போதுதான் எடுக்கிறீர்கள். தேர்தல் வரும் சமயத்தில் நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? தேர்தல் சமயத்தில் பாஜகவின் இந்து பெண்களை இழிவாகப் பேசுவதைக் காண்பிக்கப் போகிறீர்களா? எங்கே பேசியிருக்கிறோம்? யார் பேசியிருக்கிறோம்? ஒவ்வொரு முறையும் நீங்கள்தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

இப்போது சொல்கிறேன். நீங்கள் மன்னிப்புக் கேட்கும் வரைக்கும் பெண்கள் நாங்கள் சும்மா விடப்போவதில்லை. இன்று கைது செய்யலாம், நாளை மீண்டும் போராடுவோம். மறுபடியும் கைது செய்தால், மறுபடியும் போராடுவோம். நீங்கள் மன்னிப்புக் கேட்கும் வரைக்கும் இந்தப் போராட்டம் ஓயாது. பாஜக சார்பில் ஒவ்வொரு பெண் மற்றும் மகளுக்காக நாங்கள் நடத்தும் போராட்டம் இது.’

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே