மத்திய பிரதேசத்தில் செல்பி மோகத்தால் நடு ஆற்றில் சிக்கிய பெண்களை போலீசார் காப்பாற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.
வடக்கு மாநிலங்களில் பல மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா பகுதியில் பெஞ்ச் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதையும் பொருட்படுத்தாது பெஹ்ல்கெடி கிராமப்பகுதியில் சுற்றிவந்துள்ளனர் சில பெண்கள்.
ஆற்றில் குறைவான அளவில் தண்ணீர் போய்க் கொண்டிருந்த நிலையில் அதில் ஒரு செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர் இரண்டு இளம்பெண்கள்.
செல்பி எடுப்பதற்காக ஆற்றில் இறங்கி நடுவில் இருந்த பாறை ஒன்றின் மேல் ஏறியுள்ளனர்.
அணையில் தண்ணீர் திறந்துவிட்ட படியால் சிறிது நேரத்தில் பாறை மூழ்குமளவு ஆற்றின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது.
இதை கண்டு அதிர்ந்த கரையில் நின்ற மற்ற பெண்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் கயிற்றை கட்டி ஆற்றில் இறங்கி பெண்களை பத்திரமாக மீட்டனர்.
அந்த பகுதி பாறைகள் அதிகம் உள்ள பகுதி எனினும் மீட்பு படையினரால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.