ஒருநாள், டி20 போட்டிகளில் ஒதுக்கப்படுவது குறித்து கவலையில்லை; நிம்மதியாகவே இருக்கிறேன்: மனம் திறக்கும் அஸ்வின்

அஸ்வின் கடைசியாக இந்தியாவுக்காக குறைந்த ஓவர் போட்டிகளில் ஆடியது 2017-ம் ஆண்டுதான். சாஹல், குல்தீப் வந்தவுடன் இவரையும் ஜடேஜாவையும் ஓரங்கட்டினர். ஆனால் ஜடேஜா மீண்டும் வர முடிந்தது, அஸ்வினினால் முடியவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, ‘வாஷிங்டன் சுந்தர் அணிக்கு வேண்டியதைச் செய்யும் போது அஸ்வினை எங்கு நுழைக்க முடியும் என்று நீங்களே சொல்லுங்க’ என்றார். இதனையடுத்து சர்வதேச டி20, ஒருநாள் கிரிக்கெட் அஸ்வினை பொறுத்தவரையில் முடிந்துதான் விட்டதோ என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அஸ்வின் கடைசியாக இந்தியாவுக்காக குறைந்த ஓவர் போட்டிகளில் ஆடியது 2017-ம் ஆண்டுதான். சாஹல், குல்தீப் வந்தவுடன் இவரையும் ஜடேஜாவையும் ஓரங்கட்டினர். ஆனால் ஜடேஜா மீண்டும் வர முடிந்தது, அஸ்வினினால் முடியவில்லை.

ஆனால் தான் புறமொதுக்கப்படுவது பற்றி கவலையில்லை என்கிறார் அஸ்வின், தான் நிம்மதியாக இருப்பதற்கான வழிமுறைகளை கண்டு கொண்டுள்ளேன் என்ற தொனியில் இந்தியா டுடே ஊடகத்திடம் அஸ்வின் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

நீ உன்னுடனே போட்டியிட வேண்டும் என்று தலைமைத்துவ அரங்குகளில் கூறுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் நான் நிச்சயமாக ஒரு சமநிலையைக் கண்டுப்பிடித்துக் கொண்டுள்ளேன். என்னுடன் நான் எப்படி போட்டியிட வேண்டும் என்பதை வாழ்க்கையில் கற்றுக் கொன்டேன், அதே போல் இதைச் செய்யும் போதே நான் நிம்மதியாக எப்படி இருப்பது என்பதையும் கற்றுக் கொண்டேன்.

நான் ஒருநாள் கிரிக்கெட், அல்லது டி20 சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் வருவது பற்றிய கேள்விகள் எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. ஏனெனில் நான் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன், இப்போது நடத்தி கொண்டிருக்கும் வாழ்முறையை நான் மகிழ்ச்சியுடனே வாழ்ந்து வருகிறேன்.

எங்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கேம் பிரேக் செய்வேன். இதை செய்ய முடியும் என்று எனக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது. மக்கள் என்ன நினைக்கிறார்கள், மக்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி நான் கவலையே படுவதில்லை.

இப்போதைக்கு நான் மைதானத்தில் இறங்கி ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் என் முகத்திலும் பிறர் முகத்திலும் புன்னகையை விட்டுச் செல்வதுதான் என் விருப்பம்.

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

ஒருநாள் போட்டிகளில் அஸ்வின் 111 போட்டிகளில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சிக்கன விகிதம் ஒட்டுமொத்தமாக 4.91 தான். 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது அவரது சிறந்த பந்து வீச்சு.

கடைசியாக மே.இ.தீவுகளுக்கு எதிராக நார்த் சவுண்ட்டில் 10 ஓவர் 28 ரன்கள் 3 விக்கெட் எடுத்த பிறகு ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. 3 விக்கெட்டுகளை 28 ரன்களுக்கு எடுத்தவரை உட்கார வைப்பதென்றால் அது கோலி போன்றோரின் எண்ணத்தைக் காட்டுவதாகவே தெரிகிறது.

அதே போல் டி20 சர்வதேசப் போட்டியில் 46 ஆட்டங்களில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரி 22.94, சிக்கன விகிதம் 6.97. என்ற பிரமாத சிக்கனம் வைத்துள்ளார். கடைசியாக டி20 சர்வதேச போட்டியை அவர் ஜூலை 9, 2017-ல் ஆடினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே