கரோனா பரவலால் கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்களுக்குத் தடை; கும்பமேளாவுக்கு அனுமதியா?- திக்விஜய் சிங் கேள்வி

கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. ஆனால், கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் கூட உள்ளார்கள். அவர்களுக்குத் தடையில்லையா என காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் மெல்ல மெல்ல மீண்டும் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 6-வது நாளாக கரோனா வைரஸால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

இதற்கிடையே குஜராத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அகமதாபாத்தில் அடுத்து நடக்க இருக்கும் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி 3 டி20 போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் இதுகுறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், அவர் கூறுகையில், “கரோனா வைரஸ் பரவும் அச்சத்தால் கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்குப் போட்டியைக் காண தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், லட்சக்கணக்காண மக்கள் குவியும் உத்தரகாண்ட் கும்பமேளா நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நன்றி” என விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே உத்தரகாண்ட் முதல்வர் ராவத் நேற்று, மக்கள் கும்பமேளாவில் பங்கேற்க கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், “உத்தரகாண்ட் கும்பமேளாவுக்கு பக்தர்கள் வராதீர்கள் என்று நான் தடுக்கமாட்டேன். ஆனால், கரோனா விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும். தங்களின் கரோனா பரிசோதனை நெகட்டிவாக இல்லாவிட்டால், அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பக்தர்கள் அச்சப்படுகிறார்கள்.

ஆனால், கரோனா பரிசோதனை சான்றிதழ் ஏதும் கும்பமேளாவுக்குத் தேவையில்லை. 32 முதல் 33 லட்சம் பக்தர்கள் முதல் புனித நீராடலுக்கு வந்து சென்றுள்ளனர். ஆனால், அடுத்துவரும் 3 புனித நீராடல்களும் சவாலானது. பக்தர்கள் வசதிக்காக பேருந்து போக்குவரத்து வசதி 4 மடங்கு அதிகரிக்கப்படும். எல்லையிலிருந்து வருவோருக்கும் கும்பமேளா வசதியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே