இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஜுலை 8 ஆம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்களை அடித்தது.

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ரன்களை அடித்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷனான் கப்ரியல் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி அதிரடியாக விளையாடி 318 ரன்களை அடித்தது.

அந்த அணியில் பிரத்வைட் (65), ஷேன் டவுரிச் (61) ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், டாம் பெஸ் 2 விக்கெட்டுகளையும் மார்க் வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

114 ரன்கள் முன்னிலை உடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 313 ரன்களை அடித்தது. இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி 76 ரன்கள் அடித்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷனான் கப்ரியல் முதல் இன்னிங்ஸில் சூப்பராக பந்துவீசி அசத்தியது போல், இந்த இன்னிங்ஸிலும் அதிரடியாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

200 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரத்வைட் (4), ஷாய் ஹோப் (9), ஷமார் ப்ரூக்ஸ் (0) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

சற்று நிதானமாக விளையாடிய ராஸ்டன் சேஸ் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்திருந்த போது ஜெர்மைன் பிளாக்வுட் மற்றும் ஷேன் டவுரிச் களத்தில் இருந்தனர்.

இருவரும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஜெர்மைன் பிளாக்வுட்.

இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே