இதே நாளில் அன்று: தினேஷ் கார்த்திக்கின் நம்பமுடியாத கடைசி நேர அதிரடி- அதிர்ந்து போன ‘நாகின் டான்ஸ்’ வங்கதேசம்

இந்த இன்னிங்ஸ் 2011 இறுதியில் தோனி ஆடியதற்குச் சமமான ஒரு இன்னிங்ஸ் என்று அஸ்வின் பாராட்டினார். இது மறக்க முடியாத டி20 இன்னிங்ஸ், ஆனால் இன்று பலராலும் மறக்கப்பட்டு விட்டது, தினேஷ் கார்த்திக் மறக்கப்பட்டு விட்டார், நினைவுபடுத்த வேண்டியது நம் கடமை.

கொழும்புவில் நடைபெற்ற நிதாஹஸ் டிராபி டி20 இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆடிய கடைசி நேர அதிரடி இன்னிங்ஸ் இன்று நினைத்துப் பார்த்தலும் நம்ப முடியாத இன்னிங்ஸாக இருக்கிறது. இதே நாளான மார்ச் 18, 2018-ல் மகிழ்ச்சித் திருநாளாக அமைந்து இந்திய அணி கோப்பையை வென்றது.

இந்திய அணியில் கோலி, தோனி இல்லை, ரோகித் சர்மாதான் கேப்டன்.

இந்தியா நிச்சயம் ஒரு தர்மசங்கடமான தோல்வியை வங்கதேசத்திடம் அடைந்து விடும் என்ற நிலையில் வந்தார் தினேஷ் கார்த்திக் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 8 பந்துகளில் 29 ரன்களை விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 166/8 என்று நல்ல ஸ்கோரை எடுத்திருந்தது, சாகல் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். உனாட்கட் 2 விக்கெட். வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட். வங்கதேச அணியில் சபீர் ரஹ்மான் 50 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 77 ரன்கள் வெளுத்து வாங்கினார்.

கடைசியில் மெஹதி ஹசன் மிராஜ் 7 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 19 ரன்கள் விளாசினார். 167 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணியில் ஷிகர் தவான் (10) விரைவில் வெளியேற. ரெய்னா டக் அவுட் ஆனார், ராகுல் 14 பந்துகளில் 24 என்று ஆட்டமிழந்தார். ஹிட் மேன் ரோகித் சர்மா 42 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 56 ரன்களில் நஜ்முல் இஸ்லாம் பந்தில் வெளியேறினார். அப்போது ஸ்கோர் 13.2 ஓவர்களில் 98/4 என்று இருந்தது.

மணீஷ் பாண்டேவும் விஜய் சங்கரும் இணைந்து ஸ்கோரை 133 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். பாண்டேவுக்கு சரியாக சிக்கவில்லை 28 பந்துகளில் 27 ரன்கள் தான் எடுக்க முடிந்தது அதில் ஆட்டமிழந்து விட்டார். 133/5 என்ற நிலையில் 2 ஓவர்களில் 34 ரன்கள் வெற்றிக்குத் தேவை. விஜய் சங்கர் இருக்கிறார், அப்போதுதான் தினேஷ் கார்த்திக் இறங்குகிறார். ரசிகர்கள் தோனி இருந்திருந்தால் என்று நினைக்கும் போது தினேஷ் கார்த்திக் அவரைப்போல் ஆட முடியுமா என்று சந்தேகம் கொண்டிருப்பார்கள், ஆனால் நடந்ததே வேறு.

ரூபல் ஹுசைன் ஓடி வந்து வீச வருகிறார். இது 19வது ஓவர். முதல் பந்து தாழ்வான புல்டாஸ், லாங் ஆன் மேல் சிக்சருக்குப் பறக்க விட்டார் தினேஷ் கார்த்திக். அடுத்த பந்தை பின் காலை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகர்த்தி ஆஃப் வாலி பந்தை ஆன் திசையில் மீண்டும் ஒரு சாத்து சாத்த பவுண்டரிக்குப் பறந்தது.

அடுத்த பந்து ஸ்கொயர்லெக் திசையில் சிக்ஸ். அடுத்த பந்தை கட் ஆட முயன்றார் மாட்டாது. அடுத்த பந்தை இறங்கி வந்து லாங் ஆஃபில் அடித்து விட்டு 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்துதான் அபாரமான ஷாட். இன்னொவேஷன் என்றால் அதுதான் பைன் லெக் பீல்டரை அருகில் வைத்துக் கொண்டு ரூபல் வீச முழங்கால் போட்டு ஸ்கூப் செய்தார் பந்து பவுண்டரிக்குப் பறந்தது. அந்த ஓவரில் 22 ரன்கள். ரூபல் ஹுசைன் பாவம் அதுவரை 3 ஓவர் 13 ரன்கள் 2 விக்கெட். ஆனால் கடைசி ஓவரில் 22 ரன்களை கொடுத்ததில் அவர் அனாலிசிஸ் 4 ஓவர் 35 ரன்கள் ஆனது.

கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெற 12 ரன்கள் தேவை. சவுமியா சர்க்கார் வீசினார். முதல் பந்தே வைடு. 2வதாக அடிக்க வேண்டிய பந்தை விஜய் சங்கர் கோட்டை விட்டார். அடுத்த பந்து 1 ரன் எடுத்து தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக்குக்கு வந்தார். தினேஷ் கார்த்திக்கும் பாயிண்டில் தட்டி விட்டு சிங்கிள்தான் வந்தது.

3 பந்துகளில் 9 ரன்கள் தேவை. 4வது பந்தை விஜய் சங்கர் மிகப் பிரமாதமாக மட்டையை பந்தின் மேல் சொருக தேர்ட்மேன் திசையில் பவுண்டரி நான்கு ரன்கள். அடுத்த பந்தில் விஜய் சங்கர் லாங் ஆனில் தூக்கி அடித்தார். ஒரு பீல்டர் கையில் கேட்சை வாங்க முயன்ற போது அவர் கையில் பட்டு பந்து தெறித்தது. ஆனால் லாங் ஆஃபிலிருந்து வந்த மெஹதி ஹசன் தெறித்த பந்தை கேட்ச் ஆக்கினார். இந்த நடைமுறையில் தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக்கர் முனைக்கு மாறினார். ஒரு பந்தில் 5 ரன்கள் தேவை.

கடைசி பந்து.. அனைவருக்கும் திக் திக்… சவுமியா சர்க்கார் வீசிய பந்தை கவர் பவுண்டரிக்கு மேல் தினேஷ் தூக்கி அடிக்க சிக்ஸ்!! அவ்வளவுதான் அணியினர் அவரைக் கட்டிப்பிடித்து கசக்கி விட்டனர். இந்தியாவின் மறக்க முடியாத வெற்றி, தினேஷ் கார்த்திக்கிற்கு ஒரு மதிப்பை ஏற்படுத்திய ஆட்டம். சவுமியா சர்க்காரை தேற்றவே முடியவில்லை, அவரை வங்கதேச கேப்டன் தான் தேற்றினார். பாம்பு டான்ஸ் ஆட முடியவில்லை. நாகின் டான்ஸ் காலியா என்று ரசிகர்கள் வலைத்தளங்களில் வங்கதேசத்தை கிழித்து எடுத்து விட்டனர்.

இந்த இன்னிங்ஸ் 2011 இறுதியில் தோனி ஆடியதற்குச் சமமான ஒரு இன்னிங்ஸ் என்று அஸ்வின் பாராட்டினார். இது மறக்க முடியாத டி20 இன்னிங்ஸ், ஆனால் இன்று பலராலும் மறக்கப்பட்டு விட்டது, தினேஷ் கார்த்திக் மறக்கப்பட்டு விட்டார், நினைவுபடுத்த வேண்டியது நம் கடமை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே