2வது இன்னிங்சில், ரோகித் சர்மா அதிரடி சதம்

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். 

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்திருந்த போது டிக்ளேர் செய்யப்பட்டது.

தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். ரோகித் சர்மா சதம் அடித்தார். 

இதை அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 431 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரரான டீன் எல்கர் மற்றும் குயிண்டன் டீ காக் ஆகியோர் சதம் அடித்தனர்.

இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சில் 71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை விளையாடத் தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசிய மயங்க் அகர்வால் 7 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 

இதை அடுத்து ரோகித் சர்மாவுடன், செட்டீஸ்வர் புஜாரா ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா அவ்வப்போது அதிரடி காட்டி சிக்சர்களை பறக்க விட்டார். 133 பந்துகளில் அவர் சதம் அடித்தார்.

81 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா ஆட்டமிழக்கவே, ரோகித் சர்மாவுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே