நாடு முழுவதும் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் குறித்து பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.
சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் தொடர்ந்து திணறி வருகின்றன. ஆனால், கொரோனா வைரஸ் பல திரிபுகளாக மாறி வீரியம் மிக்கதாக உருமாறி வருகிறது. இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் டெல்டா வேரியண்டாக மாறியது. இது அதிவேகமாக மற்றவர்களுக்கு பரவும் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டதால் பல நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தன. தற்போது கொரோனா வைரஸ் மேலும் வீரியம் கொண்டதாக உருமாறியுள்ளது.
இதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. முதலில் இந்த வைரஸ் தென்னாப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டு தற்போது பல நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 236 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். ஒமிக்ரானை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.