ஒமைக்ரான் அச்சுறுத்தல் – எந்தெந்த மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு..??

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் மெல்ல பரவத் தொடங்கி இருப்பதையடுத்து அதைத் தடுக்கும் பொருட்டு 8 மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 19 மாநிலங்களில், 578 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 141 பேரும், அதைத் தொடர்ந்து டெல்லியில் 142 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் 41 பேரும், தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும், குஜராத்தில் 49 பேரும், கேரளாவில் 57 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களும் மீண்டும் இரவு நேர ஊரடங்கைப் பிறப்பித்துள்ளன.

புதுடெல்லி

டெல்லியில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 290 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாசிட்டிவ் விகிதமும் 0.55 அதிகரித்துள்ளதையடுத்து, இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

கர்நாடகா

கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு நாளை (28-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. புத்தாண்டு வருவதால் அது தொடர்பாகக் கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகள் நடக்கும். அப்போது மக்கள் ஏராளமானோர் கூடும்போது, தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே இரவு நேர ஊரடங்கை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது. வரும் 28-ம் தேதி முதல் அடுத்த 10 நாட்களுக்கு கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும். இந்த 10 நாட்களும் இரவில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது, விழாக்கள், நிகழ்ச்சிகள், கூட்டமாகக் கூடுதல் ஆகியவை முற்றிலும் கர்நாடகாவில் தடை செய்யப்படுகிறது. ரெஸ்டாரன்ட், ஹோட்டல்கள், பப் ஆகியவற்றில் 50 சதவீதம் பேர் அமரும் வகையில் இருக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது

அசாம்

அசாம் மாநிலத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று ஏதும் இல்லை என்றபோதிலும் அங்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இரவு 11.30 மணி முதல் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 25-ம் தேதி இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. மாநிலத்தில் திருமணம், உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

ஹரியாணா

ஹரியாணா மாநிலத்திலும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தவும், அடுத்துவரும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தடுக்கவும் இரவு நேர ஊரடங்கு கடந்த 25-ம் தேதி கொண்டுவரப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள், திருமணம் போன்றவற்றில் 200 பேருக்கு மேல் கூடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பிறப்பித்துள்ளார். அங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும். தேவைப்பட்டால் ஊரடங்கு தவிர்த்து பிற கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத்

குஜராத் மாநிலத்தில் முக்கியமான 8 நகரங்களில் மட்டும் கடந்த 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா, ஜூனாகத், ஜாம்நகர், பாவ்நகர், காந்தி நகரில் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பரவும், கரோனாவும் அதிகரித்து வருவதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை 5 நபர்களுககு மேல் கூடுவதற்கு அனுமதியில்லை. உடற்பயிற்சிக் கூடம், ஸ்பா, ஹோட்டல், திரையரங்குகள், அரங்குகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே