ஒமைக்ரான் – முதன்முதலாக பிரிட்டனில் ஒருவர் உயிரிழப்பு..!!

ஒமைக்ரான் காரணமாக முதல் பலி ஏற்பட்டுள்ளது. ‘ஒமைக்ரான் அலை வருவதாகவும், இங்கிலாந்தில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் புத்தாண்டிற்கு முன்னதாக பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் எனவும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரசில் இருந்து உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று 63 நாடுகளில் பரவியுள்ளன.டெல்டா வைரஸை விட ஒமைக்ரான் வேகமாக பரவுவதாகவும், தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கும் ஆற்றலை பெற்றுள்ளதாகவும் மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டனிலும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியதாவது: யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஒமைக்ரான் பேரலை வந்து கொண்டிருக்கிறது.

ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. இந்த வைரஸ்கள் எப்படி பரவும் என்பது குறித்து நமக்கு முன்அனுபவம் இருக்கிறது. எனவே, நாட்டில் 5ம் கட்ட கொரோனா எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,898 பேருக்கு ஒமைக்ரான் பரவியுள்ளது. பிரிட்டனில் இதுவரை மொத்தம் 3,137 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

ஒருவர் பலியாகி உள்ளார்.இதனால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க நமக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை. ஆனால், பூஸ்டர் டோஸ் மூலம் நாம் அனைவரும் அதற்கான நோய்எதிர்ப்பு திறன் அளவை கொண்டு வரமுடியும் என நமது ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். அதேநேரத்தில் ஒமைக்ரானின் தீவிரம் குறைவாக இருப்பதாக கூறிவிட முடியாது. பிரிட்டனில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புத்தாண்டுக்கு முன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே