இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-ம் நாளின் முடிவில் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 71.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.

வெலிங்டனில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் பிரித்வி ஷா, ரிஷப் பந்த், இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றார்கள்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 55 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது.

ரஹானே 38, ரிஷப் பந்த் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் இந்திய அணி இன்று தொடர்ந்து விளையாடி, 68.1 ஓவர்களில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நன்கு விளையாடி வந்த ரஹானேவும் ரிஷப் பந்தும் ரன் அவுட் காரணமாகப் பிரிந்தார்கள். 

ரஹானே தவறுதலாக ஓடியும் அவருக்காக தன்னுடைய விக்கெட்டை 19 ரன்களில் பறிகொடுத்தார் ரிஷப் பந்த்.

அடுத்தப் பந்திலேயே அஸ்வினை போல்ட் செய்தார் செளதி.

ரிஷப் பந்தை அவுட் ஆக்கியதால் மனமுடைந்த ரஹானே, 46 ரன்களில் செளதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இஷாந்த் சர்மா 5 ரன்கள் எடுத்தார்.

கடைசிக்கட்டத்தில் ஷமி 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஸ்கோரை ஓரளவு அதிகமாக்கினார்.

நியூஸிலாந்து தரப்பில் செளதி, ஜேமிசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

நியூஸிலாந்து அணி தொடக்க வீரர்களை 10 ஓவர்கள் வரை இந்தியப் பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை.

பிறகு இஷாந்த் சர்மா பந்துவீச்சில் லெக் சைடில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து டாம் லதம் 11 ரன்களில் வெளியேறினார்.

பிறகு இஷாந்த் சர்மா, பிளண்டலை 30 ரன்களில் போல்ட் செய்தார்.

கேப்டன் வில்லியம்சனும் 100-வது டெஸ்டை விளையாடும் ராஸ் டெய்லரும் நல்ல கூட்டணி அமைத்தார்கள்.

25 ஓவர்களுக்கு மேல் இருவரும் இணைந்து விளையாடினார்கள். பிறகு ராஸ் டெய்லரையும் 44 ரன்களில் இஷாந்த் சர்மா தான் வீழ்த்தினார்.

அப்போது 166 ரன்களுடன் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது.

இதனால் முதல் இன்னிங்ஸில் நியூஸி. அணியை அதிக ரன்கள் எடுக்க விடக்கூடாது என்கிற நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டது.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சனை 89 ரன்களில் வீழ்த்தினார் ஷமி.

விக்கெட் இன்றி ஓவர்கள் வீசிக்கொண்டிருந்த அஸ்வினுக்கு ஆறுதல் தரும் விதமாக, நிகோல்ஸ் 17 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் 2-ம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.

2-ம் நாளின் முடிவில் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 71.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது. 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் அந்த அணி, 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் ஷமி, அஸ்வின் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே