‘மாஸ்டர்’ படத்தில நடிக்கவிடாம செஞ்சிட்டாங்க: கண்ணதாசன் மகன் ஆதங்கம்!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருந்த நிலையில் அந்த படத்தில் என்னை நடிக்க விடாமல் செய்து விட்டார்கள் என்று கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்களின் மகன் கோபி என்பவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கவிஞர் கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் என்பவர் விஜய் நடித்த ’கத்தி’ உள்பட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கத்தி திரைப்படத்தில் நடித்ததற்காக பேசிய பணத்தை கொடுக்கவில்லை என்றும் அதனை கேட்ட போது பண விஷயத்தில் ஏன் இப்படி கறாராக இருக்கின்றீர்கள் என்று என் மீதே படக்குழுவினர் குற்றம் சாட்டியதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்

இதனை அடுத்து அதே நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான த்ரிஷாவின் ‘ராங்கி’ படத்திலும் சிபிஐ அதிகாரியாக நடிக்க கமிட்டான நிலையில் விஜய் நடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் சரியாக அதே தேதியில் வேண்டுமென்றே ராங்கி படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் இருப்பதாகவும் அந்த படப்பிடிப்புக்கு நீங்கள் வந்தே ஆகவேண்டும் என்று கூறியதால் நான் ’மாஸ்டர்’ படத்தின் வாய்ப்பை இழந்தேன் என்று கூறியுள்ளார்

அதேபோல் ’இந்தியன் 2’ படத்திலும் கமிட் ஆகும்போது இதே காரணத்தை கூறி என்னை நடிக்க விடாமல் தடுத்து விட்டார்கள் என்று கூறினார். இதனை அடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் போது இதே காரணத்தை கூறியபோது, ‘எத்தனை தடவை போய் செல்வீர்கள் என்று கேட்டதும் அவர்கள் உஷாராகி, சரி பொன்னியின் செல்வன் படத்தை முடித்துவிட்டு வாருங்கள் என்று கூறி விட்டதாகவும் அவர் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்

கண்ணதாசன் மகனான தனக்கே இப்படி சோதனை இருக்கும் நிலையில் புதிதாக வருபவர்களுக்கு திரையுலகில் எந்த அளவுக்கு சோதனை இருக்கும் என்று நினைத்து பார்க்கிறேன் என்று ஆதங்கத்துடன் கூறிய அவர் இது குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே