முழு பொதுமுடக்க அறிவிப்பால் உயர்ந்த காய்கறி விலை – பொதுமக்கள் அதிர்ச்சி..!!

நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில், சென்னை கோயம்பேடு சந்தை உள்ளிட்ட பல்வேறு மார்க்கெட்டுகளில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாத பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

சென்னை :

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒரு வார காலத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்க ஏராளமான மக்கள் கோயம்பேடு காய்கறி சந்தையில் குவிந்தனர். இதனால் காய்கறி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம் 70 ரூபாயாக உயர்ந்தது. இதேபோல் , உருளைக்கிழங்கு 25 ரூபாயிலிருந்து 80 ரூபாய் உயர்ந்தும், காரட் 50 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையான கத்திரிக்காய் 160 ரூபாயாகவும் உயர்ந்தது.

மதுரை:

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 15 ரூபாய்க்கு விற்ற தக்காளி 50 ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கு விற்ற புடலங்காய் 50 ரூபாய்க்கும், 25 ரூபாய்க்கு விற்ற கத்திரிக்காய் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையான வெண்டைக்காய் 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பீன்ஸ் 60 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 30 ரூபாயிலிருந்து 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சேலம்:

சேலம் சின்ன கடை வீதி மற்றும் பழைய பேருந்து நிலையம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் திரண்ட மக்கள், ஒருவாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் காய்கறி விலை அதிகரித்துள்ளது. நேற்று 10 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் வரையிலும், 25 ரூபாய்க்கு விற்ற கத்திரிக்காய் 40 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. கிலோ15 ரூபாய்க்கு விற்பனையான பெரிய வெங்காயம் 30ரூபாயாக உயர்ந்தது. இதேபோல் , புடலங்காய் 20 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்ந்தும், காரட் 25 ரூபாயிலிருந்து 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே