நூடுல்ஸ், பீட்சாவை போல் உடனடியாக அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்வதில்லை: பிரதமர் மோடி

அறிவியலில் தோல்வி என்பதே கிடையாது என்றும்; தோல்விகள் என்று நாம் நினைப்பவை எல்லாம் அடுத்த கண்டுபிடிப்புக்கான படிப்பினைகள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில் ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா கொல்கத்தாவில் தொடங்கியது.

இதில் இஸ்ரோ, டிஆர்டிஓ உள்ளிட்ட இந்திய அரசு நிறுவனங்கள் 200க்கும் அதிகமான அரங்குகளை அமைத்து தங்கள் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், பாதுகாப்பு சாதனங்கள் என புதிய புதிய கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரோவின் அரங்கில் இதுவரை இந்தியா விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்களின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சென்னை ஆவடியில் உள்ள கனரக ராணுவ தளவாடங்களை உற்பத்தி மையமும் அரங்கை அமைத்துள்ளது.

அறிவியல் திருவிழாவில் புனே-வை சேர்ந்த சமீர் என்ற பேராசிரியர் ஒரே நேரத்தில் ஆயிரத்து 598 மாணவர்களுக்கு ஒளிச்சிதறல் குறித்து வகுப்பெடுத்தார்.

ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தியவர் என்ற அடிப்படையில் பேராசிரியர் சமீர் கின்னஸ் சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் முக்கிய அம்சமாக கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.

அப்போது நூடுல்ஸ், பீட்சாவை போல அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்வதில்லை என்று மோடி குறிப்பிட்டார்.

சந்திராயன்-2 திட்டத்தின் இறுதி கட்டமாக விக்ரம் லேண்டர் தரை இறங்குவதில் பின்னடைவு ஏற்பட்டாலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அது குறித்து தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே