சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளி ரயில் முன் விழுந்து தற்கொலை..!!

ஹைதராபாத்தின் சைதாபாத் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பள்ளக்கொண்டா ராஜூ ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் வாரங்கல் மாவட்டம் நாஷகல் பகுதியில் நடந்துள்ளது. சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், முக்கியக் குற்றவாளியான ராஜு குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜுவின் கையில் பச்சைக் குத்தியிருந்ததை அடையாளமாகக் கொண்டு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் தேடி வந்தனர். கடந்த வாரம் அண்டை வீட்டுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, சைதாபாத்திலிருந்து தப்பியோடிய ராஜுவைப் பற்றிய துண்டுப் பிரசுரங்கள், தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி என்ற வாசகத்தோடு, பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டு, தேடுதல் வேட்டையை காவலர்கள் தீவிரப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், தெலங்கான டிஜிபி காரு, சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ராஜு கன்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இறந்து கிடந்ததாகத் தெரிவித்திருந்ததாக தெலங்கானா ராஷ்ட்டிர சமிதியின் செயல் தலைவர் கேடிஆர் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலையப் பகுதியில் 6 வயது சிறுமியை அதேப்பகுதியில் வசித்து வந்த 30 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் வியாழக்கிழமை காலை சிறுமி காணாமல் போனதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதன்பின்னர் காவல்துறையினர் தேடியதில், சிறுமியின் உடல் வெள்ளிக்கிழமை காலை குற்றவாளியின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட ராஜு தலைமறைவான நிலையில், உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. குற்றவாளியைப் பிடிக்க ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், மதுக்கடைகளிலும் காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆங்காங்கே தேடப்படும் நபர் என்று சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே