உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் கிடையாது என்பது உறுதியானது

முன்னதாக வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அதே தேதியான டிசம்பர் 27ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், டிசம்பர் 30ம் தேதி 2-ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் நேற்று மீண்டும் அறிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 9-ஆம் தேதியான இன்று தொடங்குகிறது.

வேட்புமனுக்களை டிசம்பர் 16 வரை தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் டிசம்பர் 19 என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறும். தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவியேற்பு ஜனவரி 6-ல் நடைபெறும்.

மேலும், மாவட்ட பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் உள்ளிட்டவற்றுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே