தமிழகத்தில் முகமூடி அணியும் நிலை இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியாகி இருப்பதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் உள்ளிட்ட 27 பேர் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர். 

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி சென்னை திரும்பிய காஞ்சிபுரம் பொறியாளர் ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு எடுத்து வரும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரானா குறித்து தமிழக மக்கள் அச்சமடையவோ, பீதீயடையவோ தேவையில்லை என்றார்.

மாஸ்குகளை அணிந்து நடமாட வேண்டிய சூழல் ஏதும் இப்போது நமது மாநிலத்தில் இல்லை என்றார் அவர்.

கொரானா தொற்று உறுதியானதை தொடர்ந்து பொறியாளர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் தொடர்பில் இருந்த தாக கருதப்படும் உறவினர்கள் உள்ளிட்ட 27 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனிடையே தொற்று பாதித்த பொறியாளருக்கு முதற்கட்ட சோதனை நடத்திய மருத்துவர்கள் இரண்டு பேரையும் பணிக்கு வர வேண்டாம் என ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, காய்ச்சலுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த 15 வயது சிறுவன் தொடர்ந்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்படுகிறார்.

தமிழகத்தில் மொத்தம் ஆயிரத்து 86 பேர் வீடுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், சுகாதாரத் துறை ருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே