கேரளாவில் புதிதாக 5 பேருக்கு கொரானா தொற்று உறுதி

கொரோனா பாதிப்புக்கு இதுவரை 3,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.06 லட்சத்தை கடந்துள்ளது.

சீனா மட்டுமல்லாது இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் கொரோனா தொற்றால் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன.

கொரோனா வைரஸின் புதிய பாதிப்பு மையமாக இத்தாலி உருவெடுத்துள்ள நிலையில் அங்கிருந்து இந்தியாவுக்கு பயணமானவர்களால் இந்தியாவுக்குள்ளும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

தமிழகத்திலும் கொரோனா:

நேற்று முதல் முறையாக காஞ்சிபுரத்தை சேர்ந்த 45 மதிக்கத்தக்க ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இவர் ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டிலிருந்து தாயகம் திரும்பிய நிலையில் இவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர், தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் உள்ள தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் குடும்பத்தினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மீண்டும் கேரளாவில்:
   
இதனிடையே இன்று கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் மூவர் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியவர்கள், அவர்களின் குடும்பத்தில் மேலும் இருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பத்தினம்திட்டா அரசு மருத்துவமனையில் சிகிக்க்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

முன்னதாக சீனாவிலிருந்து திரும்பிய கேரள மாணவர்கள் மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் விவரம்:

ராஜஸ்தான் – 17 (இத்தாலியர்கள் – 16 ; ஓட்டுநர் – 1)
உத்தரபிரதேசம் – 7 (ஆக்ரா – 6 ; காசியாபாத் – 1)
கேரளா – 8 (மூவர் குணமடைந்து வீடு திரும்பினர்)
டெல்லி – 2
தெலங்கானா – 1
ஹரியானா – 1 (PayTM ஊழியர்)
லடாக் – 2
தமிழகம் – 1

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே