ஃபோர்டு ஊழியர்கள் வாழ்வாதாரம் காக்கப்பட முதலமைச்சருக்கு கமல்ஹாசன் கோரிக்கை..!!

ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்பால் இந்நிறுவனத்தின் ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயுள்ளனர் என கமல் அறிக்கை.

கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக கோடிக்கணக்கானோர் வேலையிழந்திருக்கும் நிலையில், ஃபோர்டு நிறுவனம் தனது இந்தியத் தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை நிறுத்துவதாக சமீபத்தில் அறிவித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்திய தொழ்ற்சாலைகளில் தனது உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதன் பல்லாயிரம் கணக்கான ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கப் போதுமான கட்டமைப்பும், திட்டமும் இல்லாதது தான் உற்பத்தியை நிறுத்தியதற்குக் காரணம் என்றும் இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்தும், எங்களுக்கு இந்த 10 ஆண்டுகளில் 200 கோடி அமெரிக்க டாலர்கள் நஷ்டமாகி விட்டன எனவும் ஃபோர்டு இந்தியாவின் தலைவர் ஜிம் ஃபேர்லி கூறிய நிலையில், புது வாகனங்களுக்கான எங்கள் வாடிக்கையாளர்களும் குறைந்து விட்டார்கள என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 1995-ல் ஃபோர்டு நிறுவனத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஏராளமான தளர்வுகளும் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளும் ஃபோர்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டன.

அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்தாலும் தமிழக தொழிற்துறை வரலாற்றைப் பொருத்தவரை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மிக முக்கியமானது. 1996-ல் 1,500 கோடி முதலீட்டில் ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தன் தயாரிப்பைத் துவங்கியது. முதற்கட்டமாக சுமார் 2,100 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளித்தது.

பின்னர் படிப்படியாக பல அடுக்குகளாக தொழிற்சாலையை விரிவாக்கம் செய்துகொண்டது. ஏறத்தாழ தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் அனைவருமே வெவ்வேறு காலகட்டங்களில் ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இன்று நேரடியாக சுமார் 4,000 தொழிலாளர்களுக்கும் மறைமுகமாக சுமார் 25,000 பேருக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது ஃபோர்டு இந்தியா நிறுவனம்.

தொழில் விரிவாக்கம் என்பது இலாபம், எதிர்காலச் சந்தை தேவை ஆகியவற்றை மனதிற்கொண்டே நிகழும். 25 ஆண்டுகளுக்குப் பின் எங்களுக்கு பலத்த நஷ்டம், நிறுவனத்தை விரைவில் மூடப்போகிறோம் என அறிவித்திருக்கிறது. நிர்வாகத்தின் இந்தத் திடீர் முடிவினால் இந்நிறுவனத்தின் நேரடி மற்றும் மறைமுக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயுள்ளனர்.

ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நசிவு, கொரானா கால வருவாய் இழப்புகள் என தமிழகம் தத்தளித்து வருகிறது. இத்தனை பேருக்கும் உடனடியாக மாற்று வாழ்வாதாரம் கிடைக்க வழியே இல்லை. தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மக்களுக்கு நிரந்தரமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கத்தான்.

லாபம் வந்தால் எனக்கு நஷ்டம் வந்தால் மூடிவிட்டு ஓடிவிடுவோம் எனும் குறுகிய மனப்போக்கு ஏற்புடையதல்ல. இதுநாள் வரை தமிழக அரசினால் அளிக்கப்பட்ட சலுகைகள், தளர்வுகள், உதவிகள், மானியங்கள், நீர் உள்ளிட்ட வளங்கள் ஆகியவற்றுக்குப் பொருளே இல்லாமல் ஆகிவிடும்.

முதலீட்டை ஈர்ப்பதில் காட்டும் அக்கறையும், கவனமும் அந்நிறுவனங்களினால் மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பலன் கிடைப்பதை உறுதி செய்வதிலும் காட்டவேண்டும். தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே