கடலூா் மாவட்டம், நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்வு செய்வதற்கான ரகசிய தேர்தலில் திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வெற்றி பெற்றுள்ளது.
என்எல்சி நிரந்தரத் தொழிலாளா்களின் கோரிக்கைகள் தொடா்பாக நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்த அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தோவு செய்வது வழக்கம்.
அதன்படி, கடந்த பிப்.25-ஆம் தேதி ரகசிய தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.
மொத்தமுள்ள 13 தொழிற்சங்கங்களில் சிஐடியூ, தொமுச, அதொஊச உள்ளிட்ட 7 சங்கங்கள் தேர்தலில் போட்டியிட்டன. இதில் 95 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில், திராவிடா் தொழிலாளா் ஊழியா் சங்கம் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்து வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்று சிஐடியூ, பாட்டாளி தொழிற்சங்கம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிவை அறிவிக்க உத்தரவிட்டாா்.
தொடா்ந்து வாக்கு எண்ணிக்கைக்கு தோதல் நடத்தும் அலுவலரும் அனுமதி அளித்தாா்.
இதையடுத்து, நெய்வேலி வட்டம்-25 விருந்தினா் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வட்டம் 9-இல் உள்ள என்எல்சி பள்ளிக்கு கொண்டுவரப்பட்டு வாக்குகளை எண்ணும் பணி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் தொடங்கியது.
இதையொட்டி அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்வு செய்வதற்கான ரகசிய தோதலில் 2352 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் முதன்மை சங்கமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.