கிரிக்கெட்டில் இதுவரை கண்டிராத ஷாட்; ஜோப்ரா ஆர்ச்சரை ரிஷப் பந்த் அடித்த ரிவர்ஸ் சிக்ஸ் – கெவின் பீட்டர்சன் ஆச்சரியம்

4வது ஓவரில் ஆர்ச்சர் ஓடி வந்து வீசும் போது திரும்பினார் ரிஷப் பந்த் மட்டையை மாற்றினார் ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வந்த பந்தை விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் ரிவர்ஸ் ஷாட் சிக்ஸ் விளாசினார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ரிஷப் பந்த் மீண்டும் ஒரு முறை தன் ஆச்சரியகர திறமையை வெளிப்படுத்தினார். அதுவும் மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தை ரிவர்ஸ் ஷாட்டில் விக்கெட் கீப்பருக்கு பின்னால் சிக்ஸர் அடித்து பந்தை சொருகினார்.

அதுவும் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழந்து இங்கிலாந்து வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தத்தளித்த போது அனாயசமாக அதுவும் டி20-யின் சிறந்த வீச்சாளர் ஆர்ச்சரை ரிவர்ஸ் ஷாட் அடித்தது சூழ்நிலைக்கு எதிரான ஆக்ரோஷம் என்பதோடு நம்ப முடியாத ஷாட் ஆகும்.

ஏ.பி.டிவில்லியர்ஸ் மட்டுமே இத்தகைய ஷாட்டை ஆடக்கூடிய திறமை படைத்தவர், அவருக்கு முன்னதாக கேவின் பீட்டர்சன் ஒரு மேட்சிலேயே 5 ஷாட்களை ரிவர்ஸ் ஷாட் சிக்ஸ் அடித்துள்ளார் கெவின்.

ஆனால் அவரே நேற்று ரிஷப் பந்த், ஆர்ச்சர் பந்தில் அடித்த ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டை இதுவரை பார்த்திராத ஷாட் என்று விதந்தோதியுள்ளார்.

4வது ஓவரில் ஆர்ச்சர் ஓடி வந்து வீசும் போது திரும்பினார் ரிஷப் பந்த் மட்டையை மாற்றினார் ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வந்த பந்தை விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் ரிவர்ஸ் ஷாட் சிக்ஸ் விளாசினார். அனைவரும் மூக்கில் மேல் விரலை வைத்தனர். பலர் அதிர்ச்சியில் உறைந்தனர், சிலர் ரசித்துச் சிரித்தனர்.

மற்றபடி ஷ்ரேயஸ் அய்யர் நீங்கலாக அனைவரும் சொதப்பி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்ற மேட்சில் இந்த ஷாட்தான் இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் என்று கூற வேண்டும்.

இது தொடர்பாக கெவின் பீட்டர்சன் சமூக வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஹோலி ஸ்மோக்ஸ்! பந்த் ஆடிய அந்த ஷாட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் பார்த்திராதது. பிராண்ட் நியூ வெள்ளைப்பந்தை ஆர்ச்சரின் 90மைல் வேகப்பந்தை ஸ்வீப்/லிப்ட் செய்து சிக்ஸ். கிரிக்கெட்டில் இதுவரை பார்த்திராத கிரேட்டஸ்ட் ஷாட். என்று ட்வீட் செய்து விதந்தோதியுள்ளார்.

ஏற்கெனவே டெஸ்ட் போட்டியில் இதே மைதானத்தில் அன்று இங்கிலாந்திடமிருந்து வெற்றியைப் பறித்த ஒரு இன்னிங்சில் புதிய பந்தில் ஆண்டர்சன் வீச திரும்பி லேசாக உட்கார்ந்து ரிவர்ஸ் ஸ்கூப்பில் விக்கெட் கீப்பருக்கு பின்னால் சிக்ஸ் விளாசி அதிசயிக்க வைத்தார், நேற்று ஆர்ச்சர் எனும் அதிவேக பவுலருக்கும் அதே கதிதான் எனும்போது ரிஷப் பந்த் இன்னும் என்னென்ன ஷாட்களை ஆடி அசத்தப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்புகளைக் கூட்டியுள்ளது.

ஏ.பி.டிவில்லியர்ஸை 360 டிகிரி வீரர் என்பார்கள், அது போல் இந்தியாவின் வருங்கால 360 டிகிரி வீரர் என்று ரிஷப் பந்த்தை நாம் அழைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றே தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே