நடிகை ராஷ்மிகா மந்தனா இல்லத்தில் ஐடி ரெய்டு…

பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனாவின் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.

பின்னர் கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘டியர் கம்ரேட்’, மகேஷ் பாபுவுடன்  ‘சரிலேரு நீக்கெவரு’ படத்திலும் நடித்திருந்த ராஷ்மிகா தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் கார்த்தியை வைத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார்.

முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் இவர் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், அதனை பணமாக பெற்றுக்கொள்வதாகவும், அதற்கு முறையாக வரி செலுத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது.

குடகு மாவட்டம் விராஜ்பேட்டையில் உள்ள ராஷ்மிகா மந்தனாவின் வீட்டிலும் அவரது தந்தையின் திருமண மண்டபத்திலும் நேற்று சோதனையிட்ட 10க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் அவரது வங்கிக் கணக்கு விவரங்கள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் ரஷ்மிகாவின் பெற்றோரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தங்கள் சொத்துக்கள் தொடர்பான விவரங்களை அவர்களால் அளிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே