நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனை நிறுத்திவைப்பு – டெல்லி நீதிமன்றம்

நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளதால், மறு உத்தரவு வரும் வரை குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைப்பதாக டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் தாக்கூர் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது நீதிமன்றம். குற்றவாளிகளின் மேல்முறையீட்டை டெல்லி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.

குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வினய் சர்மா, அக்சய் தாக்கூர், முகேஷ் சிங் ஆகிய மூவரின் கருணை மனுக்களைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

இதனால் குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 3ஆம் தேதி தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது.

இதனிடையே தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மறு சீராய்பு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து தண்டனை திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட கருணை மனு நிலுவையில் உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிப் பவன் குப்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை 4 பேரையும் தூக்கிலிடுவதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே