தமிழகம் முழுவதும் மழைநீர் வடிகால் கட்டமைப்பை உருவாக்கி நீர் ஆதாரங்களை பெருக்குவதே அரசின் தலையாய நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்டா உள்ளிட்ட இடங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, நிவாரணப் பொருட்களை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பருவமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் சென்னையில் மழைநீர் கால்வாய்கள் முந்தைய ஆட்சிக் காலத்தில் சரியான திட்டமிடுதலின்றி மேற்கொள்ளப்பட்ட காரணத்தினாலே பல இடங்களில் நீர் தேங்கி இருப்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.
இதனை சரி செய்யும் நோக்கத்தோடு தமிழக அரசின் சார்பில் வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு ஒன்றை நியமித்திருக்கிறோம்.
அந்த அடிப்படையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி திருப்புகழ் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் இந்த மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த குழுவில் நம்பி அப்பாதுரை, பேராசிரியர் ஜானகிராமன், பேராசிரியர் கபில் குப்தா, டாக்டர் பிரதீப் மோசஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி பேராசிரியர் கொண்ட வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு விரைவில் கூடி சென்னை பெருநகர மாநகராட்சி மழைநீரால் பாதிக்கப்படாத வண்ணம் புவியியல் அமைப்பிற்கு ஏற்றவாறு வடிகால் அமைப்பது குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கும். இவர்கள் தரக்கூடிய ஆலோசனைப்படி பருவ மழை காலங்களில் மழைநீர் தேங்குவதை நிறுத்துவதற்காக நடவடிக்கைகளை இந்த அரசு ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
டெல்டா மாவட்டங்களில் சுமார் 68,652 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றுக்கான காப்பீடு, இழப்பீடு ஆகியவை உரிய முறையில் கிடைக்க வகை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்கலுக்கும் தனி கவனம் செலுத்தி வெள்ள பாதிப்பிலிருந்து அந்த மாவட்டத்தை மீட்டெடுப்பதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்பதை உங்களின் மூலமாக நான் நாட்டு மக்களுக்கும், உங்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார்.