இன்னும் 3 மாதங்களுக்கு ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவுக்கு தீர்வு கிடைக்கும் – மாநகராட்சி ஆணையர்

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் மட்டும் இன்று 1,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 88,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த நகரம் சென்னை. சென்னையில் தினசரி சுமார் 15,000 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.

பரிசோதனைகளை அதிகப்படுத்தியதன் காரணமாக, தொற்று பாதித்தவர்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இறப்பு விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு பரிசோதனைக்கு காத்திருக்காமல், மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவும் இதன்மூலம் இறப்பு விகிதம் 15-20% குறையும்.

சென்னையில் உள்ள அனைத்து மார்க்கெட்களையும் தாசில்தார் அளவிலான அதிகாரிகள் தினமும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர்.

மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி, கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுவது என அனைத்து தரப்பு மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் தொற்றை குறைக்க முடியும்.

பொதுமக்கள் இன்னும் 3 மாதங்களுக்கு ஒத்துழைத்தால் மட்டுமே இந்த கொரோனா போராட்டத்தில் ஒரு தீர்வு கிடைக்கும்.

இதுவரை 4,92,149 பேர் சென்னைக்கு வருவதற்கு இ-பாஸ் கோரி விண்ணப்பித்துள்ளனர். 1,61,764 இ-பாஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

3 லட்சத்து 30 ஆயிரம் பாஸ்கள் நிரகரிக்கப்பட்டுள்ளது. எந்தவித உரிய காரணமும் இல்லாமல் விண்ணப்பிக்கும் இ-பாஸ்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகரில், மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களைக் கண்காணிக்க 16 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி குறிப்பாக டெல்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஹாட்ஸ்பாட் பகுதிகளில் இருந்து வருபவர்களை உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மார்க்கெட் மட்டுமின்றி தனியார் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும், விதிகளை மீறி இருந்தால் கட்டாயமாக 14 நாட்கள் சீல் வைக்கப்படும்.

ஜூலை 31ம் தேதிக்குப் பிறகு ரயில், பேருந்து உள்ளிட்டவை தளர்வு குறித்து அரசுதான் முடிவு செய்யும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே