நெல்லை தனியார் பள்ளி கழிவறை கட்டடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை டவுன் பொருட்காட்சி திடல் எதிரே சாப்டர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள வகுப்புகளில் சுமார் 2 ஆயிரத்து 500 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இன்று காலை பகல் 11 மணி அளவில் மாணவர்களுக்கு 10 நிமிட இடைவேளை விடப்பட்டது. இந்த இடைவேளையில் சில மாணவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றுள்ளனர். மற்றொரு கழிவறை கட்டிடம் முன்பு சில மாணவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போதுது திடீரென்று அந்த கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு நின்ற அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படித்த ராமையன்பட்டியைச் சேர்ந்த தினகரன் மகன் விஸ்வரஞ்சன் என்ற மாணவரும், 9ம் வகுப்பு படித்த டவுன் கார்த்திக் மகன் அன்பழகன் என்ற மாணவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ஒரு மாணவர் அரசு மருத்துவமனையில் பலியானார். விபத்தில் காயம் அடைந்த மாணவர் சஞ்சய் மற்றும் டவுன் பாட்டப்பத்து, வீரபாண்டி நகரைச் சேர்ந்த முத்துமாலை என்பவர் மகன் இசக்கிபிரகாஷ், டவுன் பீர்முகமது மகன் முகமது அபூபக்கர் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் விஸ்வரஞ்சன், அன்பழகன் ஆகியோர் உயிரிழந்த தகவல் மாணவர்கள் மத்தியில் பரவியதும் அவர்கள் இடிந்த கழிவறை கட்டிடம் அருகே திரண்டனர்.

இதற்கிடையே படுகாயம் அடைந்த மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்கு அரை மணி நேரம் தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் வகுப்பறைகளில் உள்ள பெஞ்சுகள், நாற்காலிகள், பள்ளியில் இருந்த மின் விளக்குகள், பூந்தொட்டிகளை அடித்து நொறுக்கினர்.

அதன் பின்னர் மாணவர்கள் நெல்லை டவுன் ரோட்டில் பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேம்பாலத்திலிருந்து பள்ளி வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதையடுத்து தகவலறிந்த நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன், துணை கமிஷனர்கள் (சட்டம் ஒழுங்கு) சுரேஷ்குமார், (போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு) சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு புறம் மட்டும் செல்லும் வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

பள்ளியில் கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான நெஞ்சை பிளக்கும் இந்த சம்பவம் நெல்லை மாநகர் முழுவதும் காட்டுத் தீயாய் பரவவே, மாணவர்களின் பெற்றோர் பதைபதைப்போடு பள்ளிக்கு திரண்டு வந்தனர்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 2 மாணவர்களின், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களது உடல்களை பார்த்து கதறியழுதது, அங்கிருந்த அனைவரையும் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே