திருப்பூரில் ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வட மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூரை அடுத்த கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கி செயல்படுகிறது. அதே வளாகத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் காரில் கயிறு கட்டி ஏ.டி.எம்., இயந்திரத்தை பெயர்த்து சென்றனர். ஏ.டி.எம்.மில் ஒரு லட்சத்து 100 ரூபாய் இருந்தது.

இதுதொடர்பாக காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்த நிலையில், ஏடிஎம் இயந்திர கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கார் விஜயமங்கலம் பகுதியில் நிற்பது தெரியவந்தது. 

அதேவேளையில், பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்ட ஏடிஎம் இயந்திரம், பெருந்துறையை அடுத்த சரளை என்ற இடத்தில் உடைக்கப்பட்ட நிலையில் கிடப்பதாகவும் தகவல் கிடைத்தது.

அதனை கைப்பற்றிய காவல்துறையினர், ரகசிய தகவலின் அடிப்படையில், கருங்கல்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக தங்கியிருந்த ஹரியானாவைச் சேர்ந்த சிலரைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.

ஆறு பேரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 69 ஆயிரம் ரூபாய், 2 நாட்டு கைத்துப்பாக்கிள், 9 தோட்டாக்கள் மற்றும் சில உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே