பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில், பேச்சாளர் நெல்லை கண்ணன் பெரம்பலூர் நட்சத்திர விடுதியில் கைது செய்யப்பட்டார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில், நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் காவல் நிலையங்களிலும் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் நெல்லை கண்ணன் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணத்தால் முதலில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நெல்லை கண்ணன், பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சிகிச்சைக்கு பின்னர் அவர் பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு விரைந்த போலீஸார், விடுதியின் பின்வாசல் வழியாக சென்று நெல்லை கண்ணனை கைது செய்தனர்.