காவல்துறை மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடல் தகனம்..!!

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நகைச்சுவை நடிகர் பத்மபூஷன் விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது.

நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

59 வயதாகும் விவேக், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 

விவேக், தனது காமெடி மூலம் பல கருத்துக்களை பரப்பினார். இதனால் அவருக்கு சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் பெயர்வைத்தனர்.

விவேக் நடிப்பு மட்டுமின்றி, சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு உள்ளிட்ட பல சமூக பணிகளை செய்து வந்தார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற விவேக், மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்துள்ளார். அதற்காக தீவிரமாக பாடுபட்டுவந்த அவர் பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள், சாலையோரம் உள்ளிட்ட இடங்களில் இதுவரை 33.23 லட்ச மரக்கன்றுகளை நட்டினார்.

மேலும், நடிகர் விவேக்கின் உடலை இன்று மாலை விருகம்பாக்கதில் உள்ள மின் தகன மேடையில் தகனம் செய்யவுள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரின் உடலுக்கு காவல் துறை மரியாதை அளிப்பதற்கு தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ள நிலையில், அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனைதொடர்ந்து அவரின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தியபின் ரசிகர்களின் கண்ணீர் கடலில் காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் வீட்டில் இருந்து அவரின் உடல் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த இறுதி ஊர்வலத்தில் ரசிகர்கள், பொதுமக்களுடன், திரைபிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

காவல்துறை மரியாதையுடன் மயானத்திற்கு விவேக்கின் உடல் எடுத்துவரப்பட்டதை தொடர்ந்து, அவரின் உடலுக்கு 78 துப்பாக்கி குண்டுகள் முழங்க தமிழக அரசின் காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது.

விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கவும், அவரின் கலை மற்றும் சமூக சேவையை கவுரவிக்க காவல் துறை மரியாதை வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

விவேக் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர்.பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து 78 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் பத்மஸ்ரீ விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே