நீட் தேர்வு எழுத செல்லும் போது கழுத்தில் தங்க நகைகள் அணிந்து செல்ல தடை இருப்பதால் திருநெல்வேலியில் புதுமணப்பெண் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை கழட்டியதோடு காலில் அணிந்திருந்த மெட்டியையும் கழற்றி கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றார்.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் 238 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

கொரோனா அச்சம் ஒருபக்கம், கெடுபிடிகள் மறுபக்கம் இருக்க பசியோடு 11 மணிக்கே தேர்வு மையத்திற்கு சென்றனர் மாணவர்கள். மாணவ மாணவிகளை மெட்டல் டிடெக்டர் வைத்து பரிசோதனை செய்தனர் காவல்துறையினர். 

கடும் சோதனைக்கு பிறகு மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கிட்டதட்ட 6 மணி நேரம் உள்ளே இருக்க வேண்டும் என்பதால், தேர்வு எழுதுவதற்கு முன்பாக பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது.

பெண்கள் ஹேர்பின், நகைகள், கொலுசு போன்றவை அணிய தடை உள்ளதால் தேர்வு மையங்களுக்கு போகும் முன்னரே இளம்பெண்கள் பலரும் நகைகளை பெற்றோர்கள், உடன் வந்தவர்களிடம் கழற்றி கொடுத்து விட்டு சென்றனர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மனைவி முத்துலட்சுமி. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்தார். முத்துலட்சுமி கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இன்று நீட் தேர்வு எழுத வந்த அவர் தனது கழுத்தில் இருந்த தாலி மற்றும் காலில் அணிந்திருந்த மெட்டியை கழற்றி கணவரிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றார்.

பொதுவாக பெண்கள் தங்களின் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்ற யோசிப்பார்கள்.

அதை அமங்கலமாக கருதுவார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட பெண்களையும் கூட அதைச் செய்ய வைத்து விட்டது இந்த நீட் கொடுங்கோல் தேர்வு. ஒரு தாலியில் என்ன முறைகேடு செய்து விட முடியும் என்று புரியவில்லை.

இப்படி கிடுக்கிப்பிடி விதிகளை வைத்து தேர்வு நடத்தியும் கூட தமிழகத்தில் போலியான மாணவர்களை மருத்துவக் கல்லூரியில் சேர்த்த அக்கிரமங்களும் நடந்துள்ளதை மக்கள் மறக்கவில்லை.

இத்தனை பாவங்களைச் சம்பாதித்து ஒரு தேர்வு தேவையா என்பதே மக்களின் கோபாவேச கேள்வியாக உள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே