புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டியது நம் அனைவரின் கூட்டு பொறுப்பு – பிரதமர் மோடி

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கத்தை புரிந்துகொண்டு அதில் சொல்லப்பட்டதை அப்படியே நடைமுறைப்படுத்துவதில் அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது என்று புதிய தேசியக் கல்விக்கொள்கைக்கான ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பேசினார்.

பள்ளக் கல்வி மற்றும் உயர்கல்வியில் மாற்றங்களைச் செய்து உலகத் தரத்துக்கு உயர்த்தும் வகையில் புதிய தேசியக் கல்விக்கொள்கையை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது.

இந்திய புதிய தேசியக் கொள்கைக்கு பல மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள அதை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக இருந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக “உயர்கல்வி மேம்பாட்டில் தேசியக் கொள்கையின் பங்கு” எனும் தலைப்பில் ஆளுநர்கள் மாநாட்டுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்தது. 

இந்த மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மாநில ஆளுநர்கள் ஆகியோர் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டின் தொடக்கவிழாவான இன்று பிரதமர் மோடி பேசியதாவது:

தேசியக் கல்விக் கொள்கை கடந்த 1986-ம் ஆண்டிலிருந்து மாணவர்களுக்கு அளித்துவந்த ஒரு அழுத்தம், புதிய தேசியக் கல்விக் கொள்கையில் நீக்கப்பட்டுள்ளது.

நம்முடைய மாணவர்கள், இளைஞர்கள் இனிமேல், அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பாடங்களைக் கற்கலாம்.

புதிய தேசியக் கல்விக்கொள்கையின் நோக்கம் என்பது மாணவர்களைப் படிக்கவைப்பதற்கு பதிலாக, கற்றுக்கொள்ள வைக்கும். பாடப்புத்தகங்களில் கூறப்பட்டுள்ளதைத் தவிர்த்து, புத்தாக்க சிந்தனைகளை வளர்க்கும்.

முன்னதாக மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தைப் படித்து பின்னர்தான் அதை உணர்ந்து கொள்வார்கள். ஆனால், இந்த புதிய தேசியக் கல்விக்கொள்கையில் மாணவர்களின் கவலைகள் களையப்பட்டுள்ளன.

சிறுவயதிலிருந்தே தொழில்குறித்த அறிமுகம் கிடைப்பதால், வாழ்க்கையை எதிர்கொள்ள நம்முடைய இளைஞர்கள் சிறப்பாகத் தயாராவார்கள்.

உலகளவில் வேலைக்கான சந்தையில் அவர்களின் பங்கேற்பும், இந்தியர்கள் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

பழங்காலத்திலிருந்தே கற்றலின் மையாக இந்தியா இருந்து வந்திருக்கிறது. இந்த 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை பொருளாதார அறிவுசார் நாடாக மாற்றவே அரசு பணியாற்றி வருகிறது.

புதிய தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதைப் போன்று அதன் நோக்கத்தை அறிந்து அதை அப்படியே நடைமுறைப்படுத்தும் கூட்டுப்பொறுப்பு நமக்கும், அதோடு தொடர்புடையவர்கள் அனைவருக்கும் இருக்கிறது.

அதிகமான ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் புதிய கல்விக்கொள்கையோடு இணைந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் கல்வி நிறுவனம் தொடங்குவதற்கு புதிய தேசியக் கல்விக்கொள்கை வழி அமைத்துக் கொடுக்கிறது

நாட்டின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு கல்விக்கொள்கையும், கல்விமுறையும் மிகவும் முக்கியம். மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் அனைத்தும் கல்வி முறைக்கு பொறுப்பாக இணைந்திருக்கிறார்கள்.

ஆனால் அரசு, கல்விக் கொள்கையில் அதன் தலையீடு, அதன் தாக்கம் மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்பதும் உண்மை.

வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை ஆகியவை நாட்டுக்கானது. அரசுக்கானது அல்ல. ஆனால், கல்விக் கொள்கை அனைவருக்குமானது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே