என் பயிற்சியாளரின் தந்தை காலமானார்; அவருக்கு இந்த இன்னிங்ஸை அர்ப்பணிக்கிறேன் – இஷான் கிஷன் உருக்கம்

டாம் கரண் வீசிய முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பியது சிறப்பு வாய்ந்த தருணமாக உள்ளது. அந்தத் தருணம்தான் நான் இப்படியே ஆக்ரோஷமாக ஆடலாம் என்ற நம்பிக்கையை அளித்தது. 

சர்வதேச டி20-யில் தன் பொறிபறக்கும் அரைசதம் மூலம் கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்திருக்கும் இஷான் கிஷன் தனது இன்னிங்ஸை மறைந்த தன் பயிற்சியாளரின் தந்தைக்கு அர்ப்பணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

32 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்த இஷான் கிஷன் ஓய்வு ஒழிச்சலற்ற அதிரடி கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி கூறுவது போல் எதிரணியிடமிருந்து சடுதியில் ஆட்டத்தைப் பறித்துச் சென்றார்.

தனது இந்த இன்னிங்ஸ் குறித்து ஆட்ட நாயகன் இஷான் கிஷன் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கூறியதாவது:

எனது இந்த இன்னிங்ஸுக்காக என்னிடம் நிறைய வேட்கை இருந்தது. என் பயிற்சியாளரின் தந்தை சில தினங்களுக்கு முன்பு காலமானார். இந்த இன்னிங்ஸை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.
பயிற்சியாளர் என்னிடம் சொன்னார், குறைந்தது 50 ரன்களையாவது நீ எடுக்க வேண்டும், என் தந்தைக்காக எடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். எனவேதான் இந்த ஆட்டத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.

மூத்த வீரர்களும் என் ஆட்டத்தை பயமின்றி வெளிப்படுத்துமாறு உற்சாகமூட்டினர். தரமான அணிக்கு எதிராக முதல் போட்டியில் இறங்கி ஆடுவது அத்தனை எளிதல்ல. மும்பை இந்தியன்ஸ் அணியும் எனக்கு உதவியது. இதே உத்வேகத்தை தொடர்வேன்.
ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன், எதிர்முனையில் விராட் கோலி சூப்பராக ஆடிக்கொண்டிருந்தார். நான் ஆட்டத்தை வெற்றி பெறும் வரை இருந்து முடிக்க முடியவில்லையே என்று ஆதங்கமாக இருக்கிறது.

டாம் கரண் வீசிய முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பியது சிறப்பு வாய்ந்த தருணமாக உள்ளது. அந்தத் தருணம்தான் நான் இப்படியே ஆக்ரோஷமாக ஆடலாம் என்ற நம்பிக்கையை அளித்தது.
இந்த அறிமுக ஆட்டம் ஆடும் உணர்வு எனக்கு மீண்டும் கிடைக்குமா என்று தெரியவில்லை. என் பயிற்சியாளர்கள் அனைவர் குறித்தும் பெருமை கொள்கிறேன். அவர்கள் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள், என்னிடம் என்ன உள்ளது என்பதை நான் அவர்களுக்குக் காட்டுவேன்.

இவ்வாறு கூறினார் இஷான் கிஷன்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே