சமரச பேச்சுவார்த்தை நடத்தாமல் அனுப்ப பட்ட முத்தலாக் நோட்டீசை ரத்து செய்து உத்தரவு

கணவன், மனைவி இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தாமல் வழங்கப்பட்ட முத்தலாக் நோட்டீஸை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனியைச் சேர்ந்த நசீமா – மைதீன் பாட்சாவுக்கு கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், கணவர் வீட்டினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக நசீமா போடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து,கணவர் வீட்டினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையால் நசீமா வழக்கை திரும்பப் பெற்றார்.

இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி கணவர் மைதீன் பாட்சா தரப்பில் இருந்து நசீமாவுக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 2010ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி நசீமாவுக்கு முத்தலாக் நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதை உறுதி செய்வதாகவும்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நசீமா தேனி சார்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், முத்தலாக் நோட்டீஸ் வழங்கியது செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து மைதீன் பாட்சா தரப்பு தேனி கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நசீமா முத்தலாக் நோடீசை எதிர்த்து வழக்கு தொடரவில்லை என்றும், எனவே தேனி சார்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை ஏற்ற  தேனி கூடுதல் நீதிமன்றம் 2015ம் ஆண்டு நவம்பர் 30ல் சார்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து நசீமா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி நிஷா பானு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருக்குரான்படி உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே தலாக் சொல்லப்பட வேண்டும் என மேற்கோள் காட்டிய நீதிபதி, தலாக் வழங்குவதற்கு முன்பு கணவர், மனைவி வீட்டினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

ஆனால், நசீமா விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தெரியவில்லை என கூறிய நீதிபதி, இந்த விவகாரத்தில் சட்டப்படி முத்தலாக் வழங்கியதாக கருத முடியாது என மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தார்.

மேலும், மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து ஆணையிட்டார்.  

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே