துப்பாக்கியால் சுடப்பட்ட தனியார் பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் உயிரிழப்பு

வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் என்பவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

தந்தையை இழந்த முகேஷ் குமார், தண்ணீர் கேன் விநியோகிக்கும் தொழில் செய்து வரும் தனது தாய் சோபனாவுக்கு உதவியாக இருந்து வந்தார்.

பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த அவர் அதே ஊரில் பார்கவி அவென்யூவில் வசிக்கும் தனது நண்பனான விஜயை பார்க்கச் சென்றுள்ளார்.

விஜயும், முகேசும் ஒரு அறையில் பேசிக் கொண்டிருக்க, விஜயின் சகோதரரான உதயா என்பவர் வீட்டிற்கு வெளியிலும், மற்றொரு சகோதரரான அஜித் வீட்டில் உள்ள வேறொரு அறையிலும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் – முகேஷ் இருந்த அறையில் இருந்து, திடீரென துப்பாக்கியால் சுடப்பட்ட சத்தம் கேட்கவே அதிர்ச்சி அடைந்த உதயாவும், அஜித்தும் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது துப்பாக்கி குண்டு நெற்றியில் பாய்ந்து துளைத்துக் கொண்டு பின்னந்தலை வழியாக வெளியேறிய படி, ரத்த வெள்ளத்தில் முகேஷ் துடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர்.

அந்த சமயத்தில் துப்பாக்கியுடன் விஜய் அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

உயிருக்குப் போராடிய முகேஷ், ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், முகேஷ் குமார் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாழ்ம்பூர் போலீசார், உதயாவையும் அஜித்தையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தப்பி ஓடிய அவர்களின் சகோதரர் விஜயை தேடி வருகின்றனர்.

விஜய்யை கண்டுபிடிப்பதற்காக வண்டலூர் மற்றும் கேளம்பாக்கம் வரையிலான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

உறவினர்கள் வீடுகளில் விஜய் பதுங்கி உள்ளாரா?? என்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய் வைத்திருந்த துப்பாக்கி எந்த ரகத்தைச் சேர்ந்தது? அவருக்கு எப்படி கிடைத்தது? எதற்காக முகேஷை சுட்டார்? என்று தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அது நாட்டுத் துப்பாக்கியாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே