தான் வாழ மற்ற உயிரினங்களை அழிக்க முற்பட்டுவிட்ட மனித சமூகம், தனக்காக ஒவ்வொரு நாளும் சூழலை மாற்றியமைத்துக்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் நாம் அனைவரும் வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்திலாவது அன்னை தெரசாவை நினைவு கூர்ந்திருப்போம்.

பல நேரங்களில் மற்றவர்களை “ஆமா நீ பெரிய அன்னை தெரசா, அப்படியே சேவ செய்யப் போர” என்று நம்மில் சிலர் நண்பர்களுடன் பேசி மகிழ்ந்திருப்போம். கேளி செய்திருப்போம். சில நேரங்களில் நகைச்சுவையாகப் பேசப்பட்டாலும், அன்னை தெரசாவின் வாழ்க்கை அவ்வளவு எளிதாக பேசிவிட முடியாது. அதே நேரம் வாழ்நாளில் நாம் யாரும் நம்மை பெற்றவர்களைத் தவிற மற்றவர்களை அவ்வளவு எளிதாக அன்னை என்றோ அல்லது தாய் என்றோ அழைத்துவிடமாட்டோம்.

நாமெல்லாம் அன்னை என்கிறோம் என்றால் அதற்கு அவர்களின் மேல், அளவுகடந்த அன்பும் காதலும் கொண்டிருப்போம் . ஆனால் இங்கு ஒருவர் உலக மக்கள் அனைவராலும் அன்னை என்று அழைக்கப்படுகிறார். எத்தனை சாதனைகளைச் செய்திருந்தால் இந்த மனித சமூகத்தில் இப்படி ஒரு பெயரை பெற்றிருக்க முடியும்?.

அல்பேனியா நாட்டில் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் இரு மூத்த சகோதர சகோதரர்களுடன் பிறந்தவர் தான் அன்னை தெரசா. உண்மையில் இந்திய மக்களால் அன்னை தெரசா என அன்போடு அழைக்கப்படும் இவர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர் தான். பிறந்தது முதலே அன்னையின் அன்பில் வளர்ந்தது அந்த குழந்தை. மற்றவர்களைப் போன்று அல்லாமல், ஓடி ஆட வேண்டிய சிறு வயதிலேயே சமுக சேவையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் அவர். தனது 8ம் வயதில் தந்தை இறந்துவிட, தாயின் பிள்ளையாக வளர்ந்தார்.

தனி மனிதனுக்கான சமூகத்தில் இருக்கும் கடமைகள், நற்குணங்கள் ஆகியவற்றைத் தாயிடம் இருந்து கற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, தன்னுடைய 12வது வயதில் சமூக சேவைகளில் ஈடுபடத்தொடங்கிவிட்டது அந்த குழந்தை. சாதாரண அந்த குழந்தையின் ஆரம்பகால நடவடிக்கைகள் பின்னாட்களில் தன்னை அன்னைத் தெரசாவாக அனைவரும் பார்க்கக் காரணமாக இருக்கும் என்பதை அன்று அரிந்திருக்கவில்லை.

அன்னைத் தெரசா என்றாலே அனைவருக்கும் கருணை என்ற எண்ணம் கண் முன்னே வந்துவிடும். அந்த அளவிற்குக் கருணையுடன் இருந்த அவரிடத்தில் நகைச்சுவையும், வசீகரிக்கும் திறனும் சற்றும் குறைவாக இருந்ததில்லை. ஆம், தனக்கே உரிய பாணியில் அனைவருக்கும் உதவி செய்வது, ஏழை எளியவர்கள், ஊனமுற்றோர்கள், பள்ளி மாணவர்கள், காயமடைந்தவர்கள் என அனைவருக்கும் ஆருதலாக இருந்து வந்தார் அவர். ஒரு சிறுமியாகச் சிறுவயதில் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துவந்த அவர் 18ம் வயதில் முழு நேர சமூகப் பணியில் ஈடுபட வேண்டுமென நினைத்திருந்தார்.

இதன் ஒரு பகுதியாக Sodality of children of Mar என்ற அமைப்பில் மறைப்பணியாளராக தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து 1928 ல் இந்தியாவில் நிலவிய பசி, பட்டினியைத் தெரிந்துகொண்ட அவர் 1929ம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவிற்கு வந்திருந்தார். மேற்கு வங்கத்தின் கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தடைந்த ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா என்னும் தெரசா சட்ட முறைப்படி பெயரை மாற்ற வேண்டியிருந்தது.

பிரான்ஸ் நாட்டில் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் சேவையாற்றிய சகோதரி “தெரசா” மார்டினின் பெயரை தனக்குச் சூட்டிக்கொண்டார் அவர். அன்று முதல் தெரசாவாக அறியப்பட்டவர் தான் பின்னாட்களில் தலை சிறந்த குணமான கருனை எனும் பண்பினால் உலக அளவில் அன்னை தெரசாவாக அறியப்பட்டார்.

தொடர்ந்து 1942 -43 காலகட்டத்தில் இரண்டாம் உலகப்போர் உச்சத்திலிருந்தது, மேலும் இதனுடன் விடுதலை போராட்டங்களும் இணையவே இந்தியாவில் பசி, பஞ்சம் என்ற நிலை மேலும் அதிகரித்திருந்தது. இந்தியர்களின் வறுமையைக் கண்டு வருந்திய அன்னை தெரசா தான் பார்த்து வந்த ஆசிரியர் பணியைத் துறந்து முழு நேர சேவகராக மாறினார்.

1948இல் முதல், தன்னை முழு நேரச் சேவகராக மாற்றிய தெரஸா குடிசை பகுதிகளுக்குச் சென்று ஏழை எளியவர்களிடம் நலம் விசாரிப்பது, ஆறுதல் கூறுவது என தன் பணியை மேலும் கூட்டியிருந்தார். மருத்துவர்களுக்கான குணங்களாகப் பார்க்கப்படும், ஆர்வம், பொறுப்பு, உற்சாகம் என அனைத்தையும் கற்றறிந்தார்.

மக்களுக்குப் பணி செய்ய மருத்துவம் மிக அவசியமானது என்பதை அறிந்துகொண்ட தெரசா மருத்துவத்தில் அதிக நாட்டம் காட்ட ஆரம்பித்தார். இதற்கு முன்னராக 17 ஆண்டுகள் ஆசிரியர் பணியிலிருந்தது அவருக்கு பெரும் அனுபவமாக இருந்தது. தொடர்ந்து 1950ம் ஆண்டு கொல்கத்தாவில் “பிறர் அன்பின் பணியாளர்” என்ற கத்தோலிக்க திருச்சபை அமைப்பைத் தொடங்கினார் தெரசா. இதன் மூலம் பசியால் வாடுபவர்கள், ஊனமுற்றோர், ஆதரவற்றோர், ஏழைகள் என சமூகத்தின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளித்தார் அவர்.

மேலும் அதே ஆண்டு காளிகட் என்ற இடத்தில் நிர்மல் ஹ்ருதய் எனும் முதியோருக்கான கருணை இல்லத்தைத் தொடங்கினார். தனித்துவிடப்பட்ட பலரது வாழ்வில் அந்த இல்லம் ஒரு அகல் ஒளியானது. ஒரு காலகட்டத்தில் அந்த இல்லம் காளிகட் இல்லமானதும் நிகழ்ந்தது. தொடர்ந்து அதே ஆண்டு “மிஷனரிஸ் ஆப் சார்ட்டிஸ்” என்ற சேவை அறக்கட்டளையை தொடங்கி அதிகம் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சேவை அளித்து அடைக்கலம் கொடுத்தார்.

தனது வாழ்நாள் சேவையைத் தொடர்ந்த தெரசா 1955ல் சிசுபவன் என்ற இல்லத்தைத் தொடங்கி ஊனமுற்ற, மனவளர்ச்சி குறைந்த, குப்பைகளில் வீசப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் அளிக்க ஆரம்பித்தார். ஆம், பெயரில் மட்டும் அவர் அன்னை அல்ல, அதைத் தாண்டி அனைத்திலும் அவர் அன்னை தான். ஒவ்வொரு தேவைகளுக்கும் தனித்தனியான மருத்துவமனைகள், இல்லங்கள் தொடங்கி சேவையை விரிவுபடுத்தி வந்தார்.

சிறைக் கைதிகள், தொழு நோயாளிகள், போதைக்கு அடிமையானவர்கள் என அனைவருக்குமே அன்பை அருளும் வண்ணமாக தனித்தனி அமைப்புகளை தொடங்கினார், சேவைகளை மேற்கொண்டார். 1910 அல்பேனியாவில் பிறந்த இவர் 1951 ல் இந்திய குடியுரிமை பெற்றவராக இருந்தார். பிற்காலத்தில் இந்தியா மட்டுமல்லாது எந்த நாடுகளில் எல்லாம் பஞ்சம், பசி தலைவிரித்து ஆடுகிறது அந்த நாடுகளிலும் தன்னுடைய சேவையை விரிவுபடுத்தினார்.

இந்த விரிவாக்கம் 1965ல் முதல் ஆரம்பமானது. காலையிலே எழுவது, நாள் முழுக்க சேவையில் ஈடுபடுவது என்ற இவரின் வாழ்நாள் வரலாறுகளை அங்கீகரிக்கும் வண்ணமாக 1979ல் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து 1980ல் இந்தியாவில் உயர்ந்த விருதாக அறியப்படும் பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அன்பால் இந்த உலகையே கட்டி ஆண்ட அந்த அன்னை 1997ல் தான் இரக்கும் வரை சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்து மறைந்தார்.

ஒரு காலத்தில் அவர் மறைந்துவிட்டாலும் அவரால் ஆரம்பிக்கப்பட்ட இல்லங்கள் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிறர் அன்பின் பணியாளர் திருச்சபை 1997 காலகட்டத்திலேயே 123 நாடுகளில் 610 திருச்சபைகளாக இயங்கி வந்தன. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏன், நூற்றாண்டுகள் கடந்தாலும் அவரைப் போன்ற அன்னையை இவ்வுலகம் சந்திக்குமா என்பது சற்று சந்தேகத்திற்குரியது தான்..

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே