பாஜகவின் ஆணிவேர் “அடல் பிஹாரி வாஜ்பாய்”-ன் வாழ்க்கை வரலாறு தமிழில்!!

1996ம் ஆண்டில் சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் இவர். அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார். நான்கு தசாப்தங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், 3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) நிறுவினார். இவர் 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் ஆணிவேரென்று அக்கட்சி உறுப்பினர்களால் அழைக்கப்படுகிறார்.

இவர் குவித்த பட்டங்கள்:

பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் வரும் குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது) என்னும் இடத்தில், கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் மற்றும் கிருஷ்ணா தேவி தம்பதியருக்கு மகனாக ஒரு நடுத்தர வர்க்க பிராமண குடும்பத்தில், டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆவார்.

வாஜ்பாயி சரஸ்வதி ஷிஷு மந்திர், கோர்கி, பரா, குவாலியரில் தனது ஆரம்ப பள்ளி படிப்பை முடித்தார். வாஜ்பாய் குவாலியரின் விக்டோரியா கல்லூரியில் (தற்போது லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார். மேலும் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தனி தகுதியுடன் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.

ஆரம்பகாலப் பணிகள்:

ஆர்வ சமாஜின் இளைஞர் பிரிவான ஆர்யா குமாரின் ஆர்யா குமார் சபாவுடன் 1944ல் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். 1939ல் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ல் இணைந்தார். பாபா சாஹேப் ஆப்டி அவர்கள் மீதான ஈடுபாடு காரணமாக 1940-44ல் ஆர்.எஸ்.எஸ் அதிகாரிகளின் பயிற்சி முகாமுக்குச் சென்று 1947 ஆம் ஆண்டில் ஒரு முழுநேர ஊழியர் ஆனார். பிரிவினை கலவரம் காரணமாக சட்ட படிப்பினை அவரால் தொடர இயலவில்லை. உத்தரபிரதேசத்திற்கு ஒரு விஸ்டாராக (probationary pracharak) அனுப்பப்பட்டார். விரைவில் டீன்யல் உபாடியாயா, ராஷ்டிரதர்மம் (இந்தி மாதத்தில்), பஞ்சஜானியா (ஒரு இந்தி வார இதழ்) மற்றும் நாவல்கள் ஸ்வாதேஷ் மற்றும் வீர் அர்ஜூன் ஆகியோரின் பத்திரிகைகளில் பணிபுரியத் தொடங்கினார்.

அரசியலில் கால் பதித்த வாஜ்பாய்:

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில், தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் கைதாகி சிறை சென்ற அவர், 23 நாட்கள் கழித்து விடுதலையானார். ஆர். எஸ். எஸ். சின் ஒரு அமைப்பான ‘பாரதிய ஜன சங்’-ன் ஒரு பகுதியாக மாறிய அவர், அதன் தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததன் பேரில், கைது செய்யப்பட்டார்.

சிறையிலே முகர்ஜி அவர்கள் மரணமடைந்ததால், அவர் 1957ல் பல்ராம்பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பேச்சாற்றல் அப்போதைய பிரதமராக இருந்த நேருவையும், பிற சட்டமன்ற உறுப்பினர்களையும் கவர்ந்ததால், அவர் பலரின் நன்மதிப்பைப் பெற்றார். அப்போது, “வாஜ்பாய் என்ற இந்த இளைஞர் ஒருநாள் இந்தியாவின் பிரதமராக வருவார்” என நேரு தன் கணிப்பை வெளியிட்டார். நேருவின் கணிப்பை வாஜ்பாய் தன் செயல் திறத்தால் செய்துக் காட்டினார்.

உருவானது பாஜக:

ஜன சங்கின் தலைவரான தீனதயாள் உபாத்யாய் அவர்கள் திடீரென மரணமடைந்ததால், ஜன சங்கின் தலைமைப் பொறுப்பு, வாஜ்பாயின் கைகளில் வந்தது. 1977ல், அவர் ஜன சங்கை, புதிதாய் உருவான அமைப்பான ஜனதா பார்டியுடன் இணைத்தார். அக்கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றதால், அவர் வெளியுறவுத் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மொரார்ஜி தேசாயின் ராஜினாமாவிற்குப் பின்னர், ஜனதா கட்சிக் கலைக்கப்பட்டதால், பாரதிய ஜன சங் மற்றும் ஆர். எஸ். எஸ். அமைப்பை இணைத்து, அவரது நீண்ட கால நண்பர்களான எல். கே. அத்வானி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் இணைந்து ‘பாரதிய ஜனதா கட்சியை’ 1980ல் உருவாக்கினார். 1995ல் சட்டமன்றத் தேர்தலில், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பி.ஜே.பி வெற்றிப் பெற்றதால், அரசியலில் அக்கட்சி முக்கியத்துவம் பெற்றது. மேலும், 1996ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அக்கட்சி வெற்றிக் கோடியை நாட்டியது.

பிரதமரான வாஜ்பாய்:

1996ல் நடந்த பொதுத் தேர்தலில், பி.ஜே.பி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய பிரதமரான ஷங்கர் தயால் ஷர்மா அவர்கள், அவரைப் பிரதமராகப் பொறுப்பேற்க சொன்னார். 1996ம் ஆண்டு மே 16ம் தேதி முதல் முறையாக வாஜ்பாய் பிரதமராக பதவி ஏற்றார். இந்த அரசு 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. கூட்டணி கட்சிகள் ஆதரவு விலகியதை அடுத்து ஆட்சி கலைந்தது. பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அக்கட்சிக் கலைக்கப்பட்டதால், மறுபடியும் தேர்தல் நடந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைக்கும் விதமாக, அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 13 மாதங்கள் கழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது ஆதரவைப் பின் வாங்கியதால், அடுத்தத் தேர்தல் நடக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார்.

கார்கில் போரில் வெற்றி: 3ம் முறையாக பிரதமர் ஆன வாஜ்பாய்:

இதற்கிடையில், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சுமூகமான முடிவை அமலாக்க புதிய சமாதான முன்னெடுப்புகளை வரைந்தார். 1999 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த ‘கார்கில்’ போரில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற செயல்பாட்டை செயல்படுத்தி, பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப் போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

கார்கில் போரில் வெற்றிப் பெற்றது, அவர்களின் தலைமையை மிகவும் தைரியமான மற்றும் வலுவானத் தலைமை என்று நாடு முழுவதும் போற்றச்செய்தது. இந்த வெற்றியை நினைவில் நிறுத்தும்படியாக, ஜூலை மாதம் 26 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில், ‘கார்கில் விஜய் திவஸ்’ என நியமிக்கப்பட்ட அவருக்கு, பா.ஜ. க தலைவர் நிதின் கத்காரி அவர்கள், மும்பையில் ஒரு மெழுகு சிலையைத் திறந்து வைத்தார்.

கார்கில் போரில் மிகத் திறமையாக செயல்பட்டதால், 1999 ஆம் ஆண்டில், நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க 303 இடங்களில் அதிக வாக்குகள் வெற்றிபெற்று, அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்கச் செய்தது. மூன்றாவது முறை அவர், பிரதமராகப் பதவியேற்ற பின்னர், காத்மண்டு மற்றும் டெல்லிக்கிடையே செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல், 2001ல் பாராளுமன்றம் மீது தாக்குதல், 2௦௦2ல் குஜராத் வன்முறை, போன்ற பல பிரச்சனைகள் 2004ல் நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க கட்சியைப் பெரும் தோல்வியை சந்திக்க செய்தது.

மூன்று முறை பிரதமர் பதவியில் இருந்த அவர், 2௦௦4ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசியலிலிருந்து தான் ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், நமிதா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார். அவருக்கு இயற்கையின் மீது தனி விருப்பம் உண்டு. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலி அவருக்குப் பிடித்தமான இடங்களில் முதன்மையானது. இசையிலும் நடனத்திலும் ஆர்வம் அதிகம் கொண்டவர். இவருடைய முழு வாழ்வும் இந்த இந்திய தேசத்திற்கு அர்ப்பணித்தார்.

மதச்சார்பற்ற தலைவர்:

இந்துத்துவாவை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஈர்க்கபட்டவர்தான் என்றபோதிலும், மதசார்பற்ற தலைவராகத்தான் விளங்கினார் வாஜ்பாய். 1991 ஆம் ஆண்டு அத்வானி நடத்திய ரத யாத்திரையில், வாஜ்பாய்க்கு ஒப்புதல் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கூட வாஜ்பாய் அயோத்திக்கு செல்லவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்க கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார் வாஜ்பாய்.

இலக்கியத்தின் மீது ஆர்வம்:

அவர், தனது கல்லூரியில் இருந்தே ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆர்வமுடையவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், அதில் அதிகமதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்றதால், அவருக்கு இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது எனலாம். இதனால், அவர் ஒரு எழுத்தாளராக உருவெடுத்தார். தனது சுயசரிதையை எழுதியதோடு மட்டுமல்லாமல், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்.

வாஜ்பாய் பெற்ற விருதுகள்:

1992 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
1993 – கான்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ‘இலக்கியத்தில் டாக்டர் பட்டம்’ பெற்றார்.
1994 – ‘லோகமான்ய திலகர் விருது’
1994 – ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’ வழங்கப்பட்டது.
1994 – ‘பாரத் ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ பெற்றார்.

வாஜ்பாயின் மறைவு:

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமான 16 ஆகஸ்டு 2018ல் அடல் பிகார் வாஜ்பாய் மறைந்தார். அவரது பூத உடலுக்கு, இந்திய அரசு இராணுவ மரியாதையுடன், ராஜ்காட் அருகே உள்ள தேசிய நினைவிடத்தில் (இராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தல்) வைத்து, அவரது வளர்ப்பு மகள் நமிதா பட்டாச்சாரியா கொள்ளி வைத்தார்.

படமாக்கப்படும் வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு:

பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. இந்த புத்தகத்தை மையமாக வைத்து வாஜ்பாய் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து பட தயாரிப்பாளர் ஷிவ ஷர்மா கூறும்போது, “வாஜ்பாய் வாழ்க்கையை படமாக எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்றார். படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணி நடக்கிறது. வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது. படத்துக்கு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற தலைப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே