மேற்கு வங்கம் பவானிபூர் இடைத்தேர்தல் – மம்தா பானர்ஜி வெற்றி..!!

சமீபத்தில் மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்திருந்தது. தேர்தல் முடிவுகளில் மொத்தம் உள்ள 293 தொகுதிகளில் 213 தொகுதிகளைக் கைப்பற்றி மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. 

இருந்தபோதிலும், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட 1,956 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியைத் தழுவியிருந்தார். 2016-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வெறும் 3 இடங்களை மற்றும் கைப்பற்றியிருந்த நிலையில் இம்முறை 77 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

மம்தா பானர்ஜி

தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையிலும் முதல்வராக மம்தா பொறுப்பேற்றுக்கொண்டார். சட்டமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தினால் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். இல்லையென்றால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியாத நிலை உருவாகும். இதனால், மம்தா போட்டியிடுவதற்கு ஏதுவாக, பவானிப்பூரில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும், அந்த மாநில வேளாண்துறை அமைச்சர் சுபன்தீப் சந்தோபத்யாயே அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த தேர்தலின் வெற்றி மம்தாவுக்கு மிக முக்கியமானது. பவானிப்பூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாத நிலையில் பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரேவாலை-யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீஜிப் பானர்ஜியும் போட்டியிட்டனர். பவானிப்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 57 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணிமுதல் நடைபெற்றுவந்தது. மொத்தம் 21 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தபால் ஓட்டு எண்ணிக்கை முதலே மம்தா முன்னிலை வகித்து வந்தார்.

மம்தா பானர்ஜி

21 சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்த நிலையில், மம்தா மட்டும் 84,512 வாக்குகள் பெற்றிருந்தார். பாஜக உறுப்பினர் பிரியங்கா 25,680 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். மொத்தம் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி மாபெரும் வெற்றி பெற்றிருந்தார். பவானிப்பூர் தொகுதியில் இதுதான் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் பெற்ற வெற்றியாகும். இதற்கு முன்பு இந்த தொகுதியில் அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றிருந்தவரும் மம்தாதான். தற்போது தனது சாதனையைத் தானே முறியடித்துள்ளார்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு மம்தா, மாபெரும் வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், மம்தாவை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா, “மம்தாவுக்கு எதிராக 25,000 வாக்குகளைப் பெற்றுள்ளேன். இந்த தேர்தலில் மேன் ஆப் தி மேட்ச் நான்தான். தொடர்ந்து கடினமாக உழைப்பேன்” என்று கூறினார். முதல்வரின் வெற்றியை அந்த கட்சியினர் வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே