அயோத்தி தொடர்பாக உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உச்சநீதிமன்றம் ஒருமனதாக அளித்த தீர்ப்பை மக்கள் ஏற்றுக் கொண்டது, சகிப்புத்தன்மை மற்றும் மதநல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பைத் தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அவர், இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவொரு பொன்னாள் என்று கூறினார்.
நமது நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு வலிமையாகவுள்ளது என்பதை உலகமே தற்போது கண்டுகொண்டதாகவும் மோடி கூறினார்.
அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பொறுமையுடன் உச்சநீதிமன்றம் கேட்டு, ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்த மோடி, அனைத்து மதத்தினரும், சமூகத்தினரும் இதை வரவேற்றது, தொன்மையான இந்திய கலாச்சாரம் மற்றும் சமூக நல்லிணக்க பாரம்பரியத்தின் சான்று எனவும் கூறினார்.