நடை பயிற்சி செய்தவாறே பரப்புரை மேற்கொண்ட மநீம தலைவர் கமல்ஹாசன்..!!

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைப்பயிற்சி சென்றும், பேருந்தில் சென்ற பொதுமக்களைச் சந்தித்தும், வியாபாரிகளைச் சந்தித்தும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று (16-ம் தேதி) காலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், அதன் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், உள்ள தேர்தல் பிரிவு அலுவலரிடம்,நேற்று மனுத்தாக்கல் செய்த, கமல்ஹாசன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அதைத் தொடர்ந்து, நேற்று மாலை கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட தேர்முட்டியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, கமல்ஹாசன் பேசினார். 

அதைத் தொடர்ந்து, ரேஸ் கோர்ஸில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று இரவு கமல்ஹாசன் தங்கினார்.

நடைப்பயிற்சி

இன்று (16-ம் தேதி) காலை தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து, அருகேயுள்ள, ரேஸ் கோர்ஸ் நடைபாதைக்கு கமல்ஹாசன், தனது மெய்க்காவலர்கள் யாரும் இல்லாமல் வந்தார்.

அவரது உதவியாளர் மட்டும் அவருடன் வந்திருந்ததாகத் தெரிகிறது. முகக்கவசத்தை அணிந்தபடி, ரேஸ் கோர்ஸ் நடைபாதையில், கமல்ஹாசன் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

முதலில் கமல்ஹாசன் நடைப்பயிற்சி மேற்கொண்டது அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.

சிறிது நேரத்துக்குப் பின்னரே, கமல்ஹாசன் நடைப்பயிற்சி மேற்கொண்டதை அங்கிருந்த பொதுமக்கள் கவனித்தனர். சிலர் ஆர்வத்துடன் அவருடன் பேசி, அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சிறிது நேர நடைப்பயிற்சிக்கு பின்னர், அங்கிருந்த நடைபாதையை ஒட்டியவாறு அமைந்துள்ள தேநீர் கடைக்குச் சென்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அங்கிருந்த பொதுமக்களிடம் பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

கேள்வி பதில்

பொதுமக்களில் ஒருவர், ”சிறு,குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் இருந்து எல்லாத் தொழில்களும், தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஸ்டீல் உள்ளிட்ட எல்லா மூலப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இதுதான் உங்கள் முன் இருக்கக்கூடிய சவால். இதைச் சீரமைக்க நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? எனக் கேட்டார்.

அதற்கு கமல்ஹாசன் பதில் அளித்துப் பேசும்போது, ”நான் தனிமனிதராகச் செய்து பார்த்து, நடக்கவில்லை என்பதற்காகத்தான் அரசியல் களத்துக்கே வந்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பேன்” என்றார் .

அதேபோல், பொதுமக்கள் சிலரும் தங்களது கோரிக்கையை கமல்ஹாசனிடம் தெரிவித்தனர்.

அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும், அடிப்படைப் பிரச்சினைகளைச் சரி செய்யவும் உரிய நடவடிக்கை எடுப்பேன் என கமல்ஹாசன் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

வியாபாரிகளுடன் சந்திப்பு

அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உக்கடத்தில் உள்ள மீன் மார்க்கெட் வளாகத்துக்குச் சென்றார். அங்கிருந்த வியாபாரிகளிடம் பேசி, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்களிடமும் பேசினார்.

அதைத் தொடர்ந்து உக்கடத்தில் பேருந்தில் ஏறி, பயணிகளிடம் ஆதரவு திரட்டிப் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கிருந்த பொதுமக்கள், கமல்ஹாசனுடன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

உக்கடம் சாலையில் நடக்கும் மேம்பாலப் பணியையும் கமல்ஹாசன் பின்னர் பார்வையிட்டார்.

உடற்பயிற்சி

அதைத் தொடர்ந்து, ராமநாதபுரத்தில் உள்ள சாண்டோ சின்னப்பதேவர் நினைவு திருமண மண்டப வளாகத்துக்குச் சென்ற கமல்ஹாசன் அங்கிருந்த பழைய புகைப்படங்களைப் பார்வையிட்டார்.

சாண்டோ சின்னப்பதேவரின் பழைய நினைவுகளை அங்கிருந்தவர்கள் எடுத்துக் கூற, கமல்ஹாசன் ஆர்வத்துடன் கேட்டார்.

அதைத் தொடர்ந்து அவ்வளாகத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்ற கமல்ஹாசன், அங்கு உடற்பயிற்சி மேற்கொண்டவர்களுடன் முன்னிலையில் சிலம்பம் சுற்றிக் காட்டினார்.

பின்னர், சிறிது நேரம் கமல்ஹாசன் உடற்பயிற்சி செய்தார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் மீண்டும் தங்கும் இடத்துக்குத் திரும்பிச் சென்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே