வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் – சரத்குமார் வேண்டுகோள்..!!

வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவை என சமக தலைவர் சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது.

சனி , ஞாயிறு தவிர மார்ச் 19ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தரலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதுபோல் மார்ச் 20-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும்; வேட்புமனு திரும்பப் பெற மார்ச் 22ஆம் தேதி மாலையே கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.

இந்நிலையில் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மார்ச் 12ஆம் தேதி முதல் துவங்கப்பட்ட வேட்புமனு தாக்கல் ஆனது மார்ச் 19ஆம் தேதி அன்றுடன் முடிவடைய உள்ள சூழலில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் , புதிய வங்கி கணக்கு துவங்க முடியாமல் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்களை தேர்தல் ஆணையம் அறியும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மொத்தம் ஆறு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் கடந்து இன்னும் நான்கு நாட்களே உள்ளது.

அதிலும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராடும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் வேட்பாளர்கள் தாங்கள் நிற்கின்ற தொகுதிகளில் புதிய வங்கி கணக்கு தொடங்க முடியாமல் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியாமல் உள்ளார்கள்.

ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுவது உறுதி செய்வதுடன் அனைத்து வேட்பாளர்களும் போட்டியிடுவதற்கு ஏற்ற சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் .

எனவே மாநில தேர்தல் ஆணையமும் , இந்திய தேர்தல் ஆணையமும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே