சீன அதிபர் ஜீ ஜின்பிங் தமிழகம் வர உள்ள நிலையில் அவரை மனமார வரவேற்பதாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்திய திருநாட்டை போலவே பழம்பெருமையும், நாகரிகமும் கொண்ட சீன அதிபர் ஜீ ஜின்பிங் தமிழகம் வருவது பெருமகிழ்ச்சி கொள்வதாகவும், அவரை வருக வருக என மனமாற வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திற்கும் சீனாவுக்கு இடையேயான பண்பாட்டு உறவுகளும், வணிகத் தொடர்புகளும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்று தெரிவித்துள்ள மு.க. ஸ்டாலின், சீன தேசத்துடன் வர்த்தகம் செய்தவர் தமிழ் மன்னர் மாவீரர் இராசராச சோழன் என்றும் கூறியுள்ளார்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் இரு நாட்டு நல்லுணர்வுக்கான பேச்சுவார்த்தையை தமிழகத்தில் நடத்துவது தமிழகத்திற்கு பெருமை தரத்தக்கது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்காக தமிழகத்தை தேர்வு செய்த மத்திய அரசுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், இந்த பேச்சுவார்த்தை இரண்டு தேசங்களுக்கு மட்டுமல்லாது, உலக சமுதாயத்திற்கும் ஒளி தருவதாக அமையட்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.