கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் தங்கமணியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.
தமிழகத்தில் களப்பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என அடுத்தடுத்து பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தங்கமணியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மின்சாரத்துறை சார்ந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் தங்கமணி பங்கேற்றிருந்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மின்சாரத்துறை அமைச்சருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் தங்கமணியை தொலைபேசியில் தொடர்புகொண்டு விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன்.
பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.