தேசிய விருது வென்ற நடிகர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

தேசிய விருது பெற்ற நடிகர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

67-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘அசுரன்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தேசிய விருது கிடைத்தற்கு பலரும் பாராட்டு கூறி வருகின்றனர்.

அதேபோல் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுக்காக டி.இமான் தேர்வாகியுள்ளார். ‘கண்ணான கண்ணே.’ என்ற பாடலுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஜூரி விருது ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசிய விருது பெறும்
நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அசுரன் வெற்றிமாறனுக்கும் அன்புநிறை வாழ்த்துகள்! அர்ப்பணிப்புடன் – முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன்! மென்மேலும் சிறப்புகளைப் பெறுக!” என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே