ஜெ.அன்பழகன் உடல்நிலை – அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரிப்பு..!

கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நலம் குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை அறிவித்தது.

இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அன்பழகனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அன்பழகனுக்கு நேற்று 80% ஆக்ஸிஜன் தேவைப்பட்டதாகவும், இன்று 67% மட்டுமே தேவை குறைந்திருப்பதாகவும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வாகவும் உள்ள ஜெ.அன்பழகன், கடந்த செவ்வாய்க்கிழமை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஜெ.அன்பழகன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோதே அவருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு அதிகமாக இருந்தது.

முதலில் அவருக்கு மூக்கின் வழியே பிராண வாயு வழங்கப்பட்டது.

ஆனாலும், அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாததால், செயற்கை சுவாசக் கருவிகள் (வெண்டிலேட்டா்) பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்ற தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்பழகனின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

முன்னதாக, தமிழக முதல்வரும் ஜெ. அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததோடு, தமிழக அரசின் உதவி தேவைப்பட்டால் வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 1071 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே