கொரோனா வைரஸ் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரை…

சீனாவில் இருந்து வருபவர்கள் எல்லாம் வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் அல்ல என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை அரசு ராணியார் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

பள்ளி நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்கள் ஒரு நாளைக்கு 15 முறை சோப்பு போட்டு கை கழுவ அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீனாவில் இருந்து சென்னை வரும் அனைத்து பயணிகளையும் சென்னை விமான நிலையத்தில் முழு பரிசோதனை செய்த பின்னரே அனுப்பப்படுகின்றனர் என்றார். 

சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என தெரிவித்த விஜயபாஸ்கர், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும்; மக்கள் பதற்றமோ பீதியோ அடைய வேண்டாம் என்றும் கூறினார். 

நிகழ்ச்சியின் போது தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை போன்று ஒரு மாணவியை அமர வைத்து அவர் மீது கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டிருந்தன.

கொரோனா வைரஸ் குறித்த மாணவிகளின் விழிப்புணர்வு வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே