சுங்கச் சாவடி ஊழியர்கள் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்

வாக்காளர்கள் எவ்வளவு திட்டினாலும் மானம், வெட்கம், ரோசத்தை மனதுக்குள் வைத்துக் கொண்டு ஓட்டு கேட்பதைப் போல், சுங்கச்சாவடி ஊழியர்களும் வாகன ஓட்டிகள் எவ்வளவு திட்டினாலும் நிதானத்தை கடை பிடித்தால் எந்தப் பிரச்சனையும் வராது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டை அரங்கத்தில் கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் வாகன ஓட்டுனர்களுக்குமிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

இதில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில், பேசும்போது கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் வரும் வாகன ஓட்டிகளிடம் நல்ல மதிப்பை பெரும் விதமாக மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உரிய விதிமுறைகளை பின்பற்றி, வாகன ஓட்டிகளிடம் மென்மையாக பழகினாலே பொதுமக்களால் எந்த சிக்கலும் ஏற்படாது என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளால் எனக்கு வரக்கூடிய வாக்கு பாதிக்கப்படுகிறது;

இந்த பிரச்சனைக்கெல்லாம் வருவாய் துறை அமைச்சர் தான் காரணம் என சிலர் பிரச்சினையை கொளுத்திப் போட்டு விட்டு போகிறார்கள் என்று பேசினார்.

முறையான விதிமுறைகளை பின்பற்றி வாகன ஓட்டிகளிடம் அன்புடனும், பணிவுடனும், பாசத்துடனும் பேச வேண்டும்;

அது எப்படி என்றால் ஒரு குழந்தைக்கு தாய் ஊட்டும் உணவு போல் இருக்க வேண்டும் சித்தி உணவு ஊட்டுவது போல் இருக்கக்கூடாது என்று கூறினார்.

வாகன ஓட்டிகளை  மாற்றான் தாய்மனப்பான்மையோடு பார்க்கக்கூடாது; அனைவரையும் சகோதரர்களாக பார்க்க வேண்டும் என பேசிக் கொண்டிருந்த அமைச்சர், திடீரென எங்கள் பாடு போல் உலகத்தில் யாருக்குமே கிடையாது என்றார்.

ஓட்டு கேட்டு செல்லும்போது பாதிப்பேர் சிரிக்காமல் கோபத்துடன் பதில் சொல்வார்கள் கோபப்பட்டால் ஓட்டு போய்விடும் என்பதால் பொறுத்துக் கொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்டு பொறுமையோடு இருப்போம்.

சும்மா ஓட்டு வாங்கி விட முடியாது நிதானம் பொறுமையோடு சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் ஓட்டு போய்விடும்.

ஒரு ஓட்டு போட வைக்க நாங்கள் என்ன பாடுபடுகிறோம் தெரியுமா? சும்மா ஒன்றும் அமைச்சராக வந்து விட முடியாது.

எவ்வளவு கோபப்பட்டாலும் திட்டினாலும் மானம், வெட்கம், ரோசம் எல்லாவற்றையும் மனதுக்குள் அடக்கி கொண்டு ஓஏபி வாங்கவும், பட்டா வாங்கவும் என்னிடம் வருவீர்களே அப்பொழுது பார்த்துக்கொள்கிறேன் என சிரித்துக்கொண்டே ஓட்டு கேட்போம்.

அதில் சில நல்ல உள்ளங்களும் எங்களை வரவேற்று ஆதரிப்பார்கள்.

அந்த வரவேற்பில் நாங்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்து மகிழ்ச்சியோடு செல்வோம்.

அதேபோன்று டோல்கேட் ஊழியர்களும் வருகின்ற வாகன ஓட்டிகள் எவ்வளவு திட்டினாலும் கோபப்பட்டாலும் பொறுமையோடு அணுகினால் எந்தப் பிரச்சினையும் வராது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே