கால்நடைகள் வளர்ப்பில் தமிழகம் முன்னோடி – முதலமைச்சர் பெருமிதம்

சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்திலான கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி ஆகியவற்றுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி ஆகியவை அமைக்கப்படுகின்றன.

இதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

விவசாய பெருவிழா, கண்காட்சி, கருத்தரங்கு ஆகியவற்றை தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதலமைச்சர் பேசினார்.

அப்போது அவர், தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களால், மாநிலத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், கால்நடைகள் வளர்ப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும் தெரிவித்தார்.

அரசின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தில் கோமாரி நோய் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

கால்நடைகளுக்கு தரமான தீவனத்தை அளிக்கும் வகையில் கால்நடை தீவன ஆலை, திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே