சென்னை: அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் இன்னோவா கார் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறி உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாகும் நிலை ஆரம்பித்து இருக்கிறது. யார் முதல்வர் என்ற சர்ச்சை தற்காலிகமாக அதிமுகவில் ஓய்ந்து இருக்கிறது. நாங்கள் கைகாட்டும் கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் அமர்வார்கள் என்று பாஜக தெரிவித்துள்ளது.
6 மாதங்களில் அரசியல் மாற்றம் ஏற்படும், பாஜக வேட்பாளர்களை எம்எல்ஏக்களாக வெற்றி பெற வைப்பவர்களுக்கு இன்னோவா சொகுசு கார் வழங்கப்பபடும் என்றும் பாஜக அறிவித்து உள்ளது. தேர்தல் சுவராசியங்கள் இப்படி இருக்க, அமைச்சர் செல்லூர் ராஜூவின் பதிலடி பாஜகவினரை திக்கு முக்காட வைத்து இருக்கிறது.
அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்குவதாக பாஜக அறிவித்துள்ளது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதிமுகவில் அப்படி ஏதும் பரிசு திட்டம் அறிவிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த செல்லூரார், ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் இன்னோவா கார் கொடுக்க வேண்டும்.
தொண்டர்கள் அனைவரும் 2021ல் அதிமுகதான் வெற்றிபெற வேண்டும் என்று உழைத்து வருகின்றனர். அதிமுகவானது என்றுமே தலைவர்களை நம்பி இல்லை, தொண்டர்களை நம்பித்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.