அமித்ஷா தொலைபேசியை ஹேக் செய்து, மோசடி செய்ய முயற்சி

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தொலைபேசியை ஹேக் செய்து, அந்த எண்ணில் இருந்து ஹரியானா அமைச்சரை தொடர்பு கொண்டு 3 கோடி ரூபாய் கேட்டு, மோசடியில் ஈடுபட முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். 

ஹரியானா மாநில அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலாவுக்கு கடந்த 20ம் தேதி தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. மறுமுனையில் பேசிய நபர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டில் இருந்து பேசுவதாகவும், கட்சி நிதியாக ரூ.3 கோடி வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.  

 அமித்ஷா வீட்டில் இருந்து நம்மிடம் ஏன் பணம் கேட்கிறார்கள் என ரஞ்சித் சிங் குழப்பம் அடைய, அடுத்தடுத்து அவருக்கு இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்தன.

சந்தேகம் அடைந்த ரஞ்சித் சிங், அமித்ஷாவின் உதவியாளரை தொடர்பு கொண்டு விசாரித்த போது, தாங்கள் யாரும் தொலைபேசியில் அழைக்கவில்லை என கூறினார். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், மோசடி நபர்களின் செயல் என்பது தெரியவந்தது.

அவர்களை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட போலீசார், சம்பந்தட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, அவர்களை ஹரியானா பவனுக்கு வரவழைத்தனர்.

அப்படி ஹரியானா பவனுக்கு வந்த  ஹரியானாவை சேர்ந்த உப்கார் சிங், ஜக்தர் சிங் ஆகியோர் சுற்றிவளைத்த போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட கிரேஸி கால் என்ற ஆப் உதவியுடன் இருவரும் மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். 

எனினும், தம்மை தொடர்பு கொண்டு யாரும் பணம் கேட்கவில்லை என முரணான தகவலை அளித்துள்ளார் ரஞ்சித் சிங் சவுதாலா.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே